ஏ.ஆர்.றஹ்மானும் இஸ்லாம் வருகையும்.


ஒரு கனவின் இசை! ஏ.ஆர்.ரஹ்மான்
- கிருஷ்ணா டாலின்ஸி Part 7
வி.ஐ.பி. வாழ்க்கைத் தொடர்
1988-ம் வருடம்..


திலீப்புக்கு 21 வயது. விளம்பரத் துறையிலும் திரை இசை வாசிப்பிலும் செம பிஸி. அவ்வப்போது இசைக் குழுக்களுடன் வெளிநாடு பயணம் என்று வாழ்க்கை டாப் கியரில் எகிற ஆரம்பித்தபோதுதான், அவருடைய சகோதரிக்கு அந்தக் கொடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ரஹ்மானின் குடும் பத்துக்கு பேரதிர்ச்சி. அப்பா வயிற்று வலியால் துடிதுடித்து இறந்ததை நேரில் பார்த்த திலீப்பும், அம்மாவும், சகோதரிகளும் கலங்கினார்கள். இனம் புரியாத பயம் அவர்களைச் சூழ்ந்தது!

எந்த மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ('பதற்றத்தில் சரியான மருத்துவர்களிடமோ மருத்துவமனைகளிலோகூட அவர் காட்டப்படாமல் இருந்திருக்கலாம்' என்றும் சில குடும்ப நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள்.) யார் யாரோ மாந்திரீகர்கள் வந்தும் சரியாகவில்லை. நாளுக்கு நாள் சகோதரியின் நிலைமை மோசமாகியது.

அந்தத் தருணங்களைப் பற்றி ரஹ்மானே சொல்கிறார்... ''என் அப்பா பட்ட வலி என்னை துன்புறுத்திக்கிட்டே இருந் தது. வேலூர் சி.எம்.சி, சென்னை விஜயா ஹாஸ்பிட்டல்னு ஏறக்குறைய ஒன்பது ஹாஸ்பிடல்களுக்கு அவரை மாத்தி மாத்தித் தூக்கிக்கிட்டுப் போயிட்டிருந்தோம். படுத்தபடுக்கையாக் கிடக்கிற அப்பாவைப் பார்க்க நிறையப் பாதிரியார்கள் வரு வாங்க. 

ஜபம் செய்வாங்க. நிறைய இந்துச் சாமியார்களும் வருவாங்க. மந்திரிச்சு விடுவாங்க. பிரார்த்தனைகள் செய்வாங்க. எதுவுமே சரியாகலை. கடைசியா சில முஸ்லிம் குருமார்களும் வந்தாங்க... ஆனா... ப்ச், அப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாரு.'' 

அப்பாவின் கொடுமையான கடைசிக் காலங்களை நேரில் பார்த்திருந்த திலீப், அவர் மரணத்துக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் நாத்திகராகவே மாறியிருந்தார். கடவுள் என்று ஒருவர் இருந்து இருந்தால், அப்பா இத்தனை இளம் வயதில் இறந்திருப்பாரா என்பதே அவர் மனதில் உறுத்தலாக இருந்த கேள்வி. 

இப்போது மீண்டும் அதே நோய் சகோதரியிடம் முழு வேகத்தில் திரும்பி வந்ததும், அவர் மனதில் வேறு வித குழப்பங்கள். இது யதேச் சையாக நடப்பதா அல்லது கடவுள் அல்லது ஏதோ ஒரு சக்தி எழுதும் திரைக்கதைகளில் ஒன்றா? 

ரஹ்மான் தொடர்கிறார்... ''என் டீன் ஏஜ் பருவங்கள்ல சில நாட்கள் கடவுள் இல்லைன்னு நம்பினேன். அந்த அளவுக்கு மனசு வெறுத்துப் போயிருந்தது. கடவுள் இல்லைன்னு நினைச் சாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு வெறுமை. 

அப்புறம் ஒரு கட்டத்துல நம்மைச் செலுத்துற ஒரு சக்தி இல்லாம நம்மால் நிச்சயம் இயங்க முடியாதுன்னு தோணிச்சு. அப்பத்தான் என் சகோதரியை அந்த நோய் தாக்கியது. நான் அதிர்ந்துபோயிட்டேன். ஆனா, என் சகோதரியின் நோய்... ஒரு மிராக்கிள் மாதிரி ஒருத்தர் மூலமா குணமானது!'' 

என்ன நடந்தது? யார் அவர்?

ஷேக் அப்துல் காதிர் ஜிலானி சாஹிப் ('பிர் காத்ரி' என்று அறியப்பட்டவர்) என்பவர் திலீப்பின் நோயுற்ற சகோதரியைக் காண வந்ததாகவும், அவர் செய்த பிரார்த்தனையில் சகோதரி அதிசயமாக நோய் நீங்கி உயிர் பெற்று எழுந்தார் என்றும் ரஹ்மானின் குடும் பத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

இந்தத் திடீர் மாறுதல் திலீப்பை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. அவரால் நம்ப முடியவில்லை. சகோதரியின் பிணி நீக்கம் பிர் காத்ரி கடவுளிடம் முறையிட்டுக் கொண்டுவந்த ஓர் அதிசயமாகவே அவருக்குப்பட்டது.

சகோதரி குணமானதைத் தொடர்ந்து பிர் காத்ரி, திலீப்பின் குடும்ப நண்பராகவும், வழிகாட்டியாகவும் மாறினார்.

இங்கே மற்ற ஒரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். திலீப் தன் இசை வேலைகளில் மிகக் கடுமையான உழைப்பைக் காட்டிக்கொண்டு இருந்த நேரம் அது. இந்திய கிளாசிக்கல் மற்றும் கர்னாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை என்று ஓயாமல் இசை கற்றுக் கொண்டபடி இருந்தார் திலீப். 

லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் பட்டத்தையும் முடித்துவிட்டார். அவருடைய இசை கூர் தீட்டப்பட்ட கத்தியாக மினுமினுக்க ஆரம்பித்தது. மதம் பற்றித் தீவிரமாக யோசிக்கக்கூட முடியாதபடி இசைப் பணிகள் அவரை மூழ்கடித்துக்கொண்டு இருந்தன. 

நடுநடுவே பிர் காத்ரி தரும் ஆன்மிகச் சொற்பொழிவுகளையும் கேட்டபடி இருந்தார். அதில் முக்கியமான அறிவுரை... ''கடவுள் என்பது ஒருவரே! அவரை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை உனக்குள் இருக்கும் உன்னைச் சுத்தம் செய்கிறது!''

இப்படிப்பட்ட கருத்துக்கள் திலீப்பின் மனதுக்கு அமைதியைத் தருவதாகத் தோன்றியது. நாட்கள் செல்லச் செல்ல, பிர் காத்ரியின் தாக்கம் திலீப்பின் மனநிலையிலும் மதம் பற்றிய எண்ணங்களிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும், மத மாற்றம் என்கிற அடுத்த கட்டத்தைப் பற்றி அவர் உடனே சிந்திக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை.

வேறு ஒரு சம்பவம்தான் அவரை அதை நோக்கி அழைத்துச் சென்றது.

ரஹ்மானே அதைப் பற்றிச் சொல்கிறார்... ''அப்ப நான் ஒரு ரெகார்டிங்குக்காக மலேசியாவில் இருந்தேன். திடீர்னு ஒரு நாள் கனவில் பெரியவர் ஒருவர் வந்தார். என்னை 'இஸ்லாம் மதத்துக்கு மாறு!'ன்னு சொன்னார். எனக்கு அது புரியலை. ஏதோ ஒரு கனவுன்னு விட்டுட்டேன். 

ஆனா, மறுபடியும் மறுபடியும் அதே கனவு தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தது. அது ஏதோ ஒரு divine செய்தின்னு நினைச்சேன். அம்மாவிடம் வந்து அந்த கனவைப் பத்திச் சொன்னேன். 'கடவுள்கிட்டே இருந்து வந்த செய்தியை மறுக்கக் கூடாது'ன்னு சொன் னாங்க. 

அப்போ இருந்து அம்மாவுடன் தர்காக்களுக்குப் போக ஆரம்பிச்சேன். நிறைய முஸ்லிம் குருமார்களைச் சந்திச்சேன். எனக்கு மதம் பற்றிப் பல வெளிச்சங்கள் கிடைச்சது. கொஞ்ச நாட்கள்லேயே என் குடும்பத்தில் எல்லாருமே இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டோம்!''

பிர் காத்ரிதான் ரஹ்மானின் முதல் இஸ்லாமிய குரு. தன் இல்லத்தில் ரஹ்மான் கட்டிய 'பஞ்சதன்' ஸ்டுடியோவுக்கான இடத்தைத் தேர்வு செய்து கொடுத்ததும் பிர் காத்ரிதான். ''ஐந்து விரல்களுக்கான தனிப்பட்ட செயல்களைக் குறிக்கும் இஸ்லாமிய வார்த்தைதான் 'பஞ்சதன்''' என்கிறார் ரஹ்மானின் தாயார் கரீமா பேஹம்.

பிர் காத்ரியின் மறைவுக்குப் பிறகு, மெஹ்பூப் ஆலம், முகம்மது யூசுப் பாய் போன்றவர்கள் ரஹ்மானுடைய குருமார்களாக வந்தார்கள். இப்போது கடப்பா மாலிக்.
பொதுவாகத் திரையுலகில் முஸ்லிமாக இருப்பவர்கள்கூட வேறு மதத்துப் பெயர்களை வைத்துக்கொண்டு வேலை பார்த்த காலகட்டத்தில், அதற்கு நேர் மாறாக இந்துப் பெயரில் இருந்து முஸ்லிம் பெயருக்கு மாறியதாகக் குறிப்பிடுகிறார் ரஹ்மான்.
'ரோஜா' ஆல்பத்தில்கூட அவருடைய பெயர் முதலில் 'திலீப்' என்றுதான் குறிப்பிடப்பட்டு இருந்தது. திலீப்பின் தாயார்தான் கடைசி நிமிடத்தில் மணிரத்னத்தைச் சென்று பார்த்து அந்தப் பெயரை வேறு ஒரு இஸ்லாமியப் பெயருக்குச் மாற்றச் சொன்னார். 

திலீப் ஏ.ஆர்.ரஹ்மான் ஆனது அப்போதுதான்!

எப்படி அந்தப் பெயர் வந்தது?

மத மாற்றம் நிகழ்ந்தவுடன் 'திலீப்' என்கிற பெயரையும் மாற்ற வேண்டிய சூழ்நிலை. ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் திலீப்பின் அம்மாவிடம் ஒரு ஜோதிடர் சிபாரிசு செய்த பெயர், அப்துல் ரஹ்மான். திலீப்புக்கு அப்துல் ரஹ்மான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்தப் பெயருடன்தான் சில நாட்கள் இருந்தார் திலீப். பிரபல இந்தி இசையமைப்பாளர் நௌஷாத், 'அல்லா ரக்கா ரஹ்மான் என்று வைத்துக்கொள்!' என்று சொல்லிப் பெயரைச் சற்று மாற்றினார்.

'அல்லா ரக்கா ரஹ்மான்' என்றால், அல்லாவின் அருளைப் பெற்றவர் என்று அர்த்தம். ரஹ்மானுக்கு முன்னால் இதே பெயரில் உலகப் புகழ்பெற்ற இன்னொரு இசைக் கலைஞர் தபேலா மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கான். இவர் பிரபல தபேலா மேதை ஜாகீர் ஹுசேனின் தந்தை.

திலீப் குடும்பத்தின் இஸ்லாம் மத மாற்றம் இசை உலகில் புருவங்களை உயர்த்தியது. 'ரோஜா'வின் சூப்பர் ஹிட் எல்லோரையும் மௌனமாக்கியது. ஏ.ஆர்.ரஹ்மான் என்கிற பெயர் இந்தியா முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது. அல்லா ரக்கா ரஹ்மானாக மாறிய திலீப் விரைவில் மிக ஆழ்ந்த மதப் பற்றுடைய இஸ்லாமியராக மாறினார்.

''ஒவ்வொரு வேளைத் தொழுகையும் ஓர் இறப்பு மாதிரி. அந்த நேரங்களில் நான் இறந்துவிடுகிறேன். தொழுகைப் பிரார்த்தனை முடிந்ததும் புதிதாகப் பிறந்தவன் போல் உணர்கிறேன். என் மனம், உடல் முழுக்க ஃப்ரெஷ் ஆகிறது'' என்கிறார் ரஹ்மான்.

தன் வாழ்க்கையின் வெற்றிக்கு 'ஆண்டவன் அருளும் இஸ்லாம் மதமும் முக்கியமான காரணங்கள்' என்று வெளிப்படையாகச் சொல்லி வந்த ரஹ்மானுக்கு விரைவில் மற்றொரு சிக்கல் வந்தது.

'இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு அவர் பண உதவி செய்தார்' என்கிற அதிரவைக்கும் குற்றச்சாட்டு அது!

ரஹ்மான் ஆஸ்கர் பரிசு பெற்றபோது மேடையில் சொன்ன வார்த்தைகள். "எல்லாப் புகழும் இறைவனுக்கே. என் வாழ்க்கையில் அன்பா... வெறுப்பா? இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டம் ஒன்று இருந்தது. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன். அதனால்தான் இந்த இடத்தில் நிற்கிறேன்."

ரஹ்மானின் அந்தப் பேச்சுக்கான அடிப்படை, அவர் கடைப்பிடிக்கும் 'சூஃபியிஸம்' என்கிற ஸ்பிரிச்சுவல் தத்துவம். ''நான் நம்புவது ஒன்றே ஒன்றைத்தான். இந்த உலகத்தில் இசை என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தவிர வேறு எதன் மீதும் எனக்கு நாட்டமில்லை'' என்கிறார் ரஹ்மான். 

அதன் அர்த்தம் மிகவும் விசாலமானது. சூஃபியிஸம் என்பது இஸ்லாத்தின் உள்ளீடான, கொஞ்சம் புதிரான இறையியல் மனோதத்துவம். நபிகள் நாயகத்தின் பிரதான சீடர்களால் பரப்பப் பட்ட சூஃபியிஸம் ஒரு மனிதனின் தனிப்பட்ட இதயச் சுத்திகரிப்புக்கும், அந்த நிலையின் மூலம் இறைவனின் கருணையைச் சென்றடையும் வழி என்றும் சொல்லப்படுகிறது. ஒரு சூஃபி குருவை மனதார ஏற்றுக்கொண்ட பின், அவர் காட்டும் மார்க்க வழிகளில் பயணித்தால், அமைதியுடன் வாழலாம் என்று இதைப் பின்பற்றுபவர்கள் நம்புகிறார்கள். ரஹ்மானும் அவர்களில் ஒருவர். 

இது ஓர் ஆசிரியர் - மாணவன் உறவு முறை போலத்தான். ஆனால், எந்த வழிகாட்டிப் புத்தகங்களும் கோட்பாடுகளும் கிடையாது. ஒரு குருவின் மூலம், 'தான்' என்கிற எண்ணம் நீக்கப்பட்டு, கடவுளிடம் பரிபூரணமாகச் சரணடைவதுதான் இதன் ஆதாரத் தத்துவம். ரஹ்மானும் அப்படித்தான் சூஃபியிஸத்தில் சரணடைந்தார். 

முதலில் அவருக்குக் கிடைத்த குரு, அரிஃபுல்லா முகம்மது காத்ரி (பிர் காத்ரி). அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்தவர் ஆந்திராவில் இருக்கும் அவருடைய மகன் கரிமுல்லா ஷா. இன்று வரை அவர்தான் ரஹ்மானின் சூஃபி குரு. மாலிக் பாபா என்று அவரை அழைக்கிறார் ரஹ்மான். தான் தொடங்கிய இசைக் கல்லூரிக்கு 'கே.எம். மியூஸிக் கான்சர்வேட்டரி' என்று பெயரிட் டார் ரஹ்மான். கே.எம். என்பது கரி முல்லாவின் சுருக்கம். அதே போல் 'பஞ்சதன்' ஸ்டுடியோவும் இப்போது 'ஏ.எம்.' ஸ்டுடியோ ஆகிவிட்டது. ஏ.எம். என்பது அரிஃபுல்லா முகம்மதுவின் சுருக்கம்.

'லகான்', 'கஜினி' போன்ற படங்களில் ரஹ்மானுடன் பணியாற்றிய அமீர்கான், ரஹ்மானின் சூஃபியிஸ ஈடுபாட்டைப் பற்றி ஆச்சர்யமாகப் பேசுகிறார். "அவரிடம் அது பிரமாதமாக வொர்க்-அவுட் ஆகி இருக்கிறது. தான் நம்பும் தத்துவத்தில் முழுவதுமாகச் சரணடைந்திருப்பதால்தான் அவரிடமிருந்துஇப்படி ஓர் அபூர்வமான இசை பிறப்பதாக நான் நினைக்கிறேன். எதற்கும் அலட்டிக்கொள்ளாத அமைதியான மனிதராகவும் அவரை அந்தத் தத்துவம் மாற்றியிருக்கிறது!'' என்கிறார் அமீர்கான்.

ஒரு முறை பெங்களூரு பாலஸ் மைதானத்தில் ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. திடீரென்று பெரும்மழை பொழிந்தது. சூறாவளிக் காற்று அடித்தது.மைதானத் துக்குள் வெள்ளம் புகுந்து, மேடையின் பின்புலத்தில் இருந்த செட் சரிந்து விழுந்தது. ரசிகர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார்கள். கிரீன் அறைக்குள் சென்ற ரஹ்மான் கதவைச் சாத்திக்கொண்டார். 

அமைதியாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டவர், அரை மணி நேரத் துக்குப் பிறகு வெளியே வந்தார். மேடைக்குச் சென்றார். ரசிகர் களிடம் "இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டுமா அல்லது ரத்துசெய்து விடலாமா?" என்று கேட்டார். ரசிகர்கள் "நிகழ்ச்சி வேண்டும்" என்றார்கள். புன்னகைத்த ரஹ்மான் கச்சேரியை ஆரம் பித்தார். 

மழையும் காற்றும் அதிசயம் போல் நின்றது. ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கச்சேரி நடந்தது. கடைசிப் பாடலான 'வந்தே மாதரத்தின்' இறுதி 'பாரை' ரஹ்மான் வாசித்த போது மழை மீண்டும் கொட்ட ஆரம்பித்தது. ரஹ்மான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்படவே இல்லை. இதுதான் அவருடைய ஆளுமை.

றஹ்மானின் இஸ்லாத்தின் வருகையை ஆதரித்தே இக்கட்டுரை அபுல் இர்பான் இணையத்தலத்தில் பிரசுரிக்கப்பட்டது.அவரின் படங்களின் பாடல்களை ஆதரித்து அல்ல.