யாகௌது, யா முஹ்யத்தீன் எனக் கூறலாமா?

யாராவது கஷ்டமான வேலையில் என்னை அழைத்தால் அவனது கஷ்டங்கள் தீர்க்கப்படும். நெருக்கடியான வேளையில் என் பெயர் விழித்து என்னை அழைப்பவரது துயரங்கள் நீங்கும். என்னை வஸீலாவாக்கி அல்லாஹ்விடம் கேட்கப்படும் தேவைகள் நிறைவேறும். 
யாராவது இரண்டு றகாஅத் நபில் தொழுது ஒவ்வொரு றகாஅத்திலும் சூறா பாத்திஹாவுக்குப் பின் சூறா இக்லாஸை பதினொரு தடைவ ஓதி ஸலாம் கொடுத்தபின் ரஹுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் பேரில் ஸலவாத்து ஸலாம் கூற வேண்டும். 
அதன் பின் மனதில் நினைத்துக்கொண்டு இறாக் திசை நோக்கி பதினெட்டு எட்டுக்கள் எடுத்துவைத்து ஒவ்வொரு எட்டிலும் எனது பெயர் கூறி என்னை விளிக்க வேண்டும். அல்லாஹ்வின் உதவியால் அவரது காரியம் நிறைவேறும். இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஹத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : பஹ்ஜதுல் அஸ்றார், பக்கம் - 102
ஷைய்குல் இஸ்லாம் இமாம் ஷிஹாபுதீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஷாபிஈ மத்ஹபின் பிரபல்யமான இமாமாவார். ஷைய்குல் இஸ்லாம் ஸஹரிய்யல் அன்சாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவரான இவர்களை முஜத்தித் என்றும் பலரும் பலமாகக் கூறினர். 
இவர்கள் எழுதிய நூற்கள் பாடத்திட்டத்தில் உள்ளன. இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் அறபுக் கல்லூரிகளிலும் இறுதியாண்டுக்கு இவர்களின் “நிஹாயா” என்ற சட்ட நூல் பாடத்திட்டத்தில் இருக்கின்றது. இவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் “பதாவா றமலி” என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்த நூல் அநேகமாக அனைத்து அறபுக் கலாசாலையிலும் இருக்கின்றது.
இந்த பத்வா நூலில் பின்வருமாறு ஒரு தீர்ப்பு இடம்பெறுகின்றது. அது வருமாறு,
கேள்வி : 
01.இக்கட்டான வேளைகளில் நபிமார்கள், வலிமார்கள், ஸாலிஹீன்கள், நல்லடியார்கள் உள்ளிட்டோரிடம் உதவி தேடும் நோக்கில் யாரஸூலுல்லாஹ்! யாஅலி! யாஷெய்கு அப்துல் காதிர் போன்ற வார்த்தைகளை பொதுவாக மக்கள் கூறுகின்றனர். இது (ஷரீஅத்தில்) கூடுமா? கூடாதா?
02. வலிமார்கள் மரணித்த பின்பு உதவி புரிந்திட சக்தி பெற்றுள்ளனரா? இல்லையா? 
விடை : வலிமார்கள், நபிமார்கள், ஸாலிஹீன்கள், உலமாக்கள் போன்றோரிடம் உதவி தேடுவது (ஷரீஅத்தில்) ஆகுமானதே! அவர்கள் உயிருடன் இருக்கும்போது உதவி செய்ய முடியுமாக இருப்பதுபோல் அவர்கள் மவுத்தான பின்பும் உதவி செய்திட சக்தியுண்டு. நபிமார்களின் முஃஜிஸாத்துக்கள் வலிமார்களின் கறாமத்களாகும்.
ஆதாரம் : பதாவா றமலி, பக்கம் - 382-4 
ஹனபி மத்ஹபின் சட்டத்துறையில் பிரபல்யமான நூல் துர்ருல் முக்தார் ஆகும். இந்நூலாசிரியரின் ஆசிரியரின் ஆசிரியர் அல்லாமா கைறுத்தீன் றமலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆவார்கள். இவர்களின் தீர்ப்புக்களின் தொகுப்புக்கள் “பதாவா கைரிய்யா” என்ற பெயரில் வெளிவந்துள்ளன. அதில் பின்வரும் ஒரு தீர்ப்பு இடம்பெறுகின்றது. அது வருமாறு. 
கேள்வி :
கஷ்டமான வேளைகளில் உதவிதேடி யாரஸூலல்லாஹ், யாஅலி, யாஷைய்கு அப்துல் காதிர் எனக்கூறி உதவிக்கு அழைப்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி உண்டா? இல்லையா? 
பதில் : 
கஷ்டமான வேளையில் வலிமார்களை உதவிக்கு அழைப்பதும் அவர்களிடத்தில் உதவி தேடுவதும் அவர்கள் பொருட்டைக் கொண்டு வஸீலாத் தேடுவதும் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டது. தவிர விரும்பத்தக்கது (சுன்னத்தும்) ஆகும்.
பொறாமைக்காரன், பிடிவாதக்காரன் சங்கைக்குரிய வலிமார்களின் பறக்கத்தை விட்டும், தூரமானவன் போன்றோரைத்தவிர வேறு யாரும் மறுக்க மாட்டான்.
ஆதாரம் : பதாவா கைரிய்யா, பக்கம் - 282-2 
மாபெரும் ஹதீஸ் கலை மேதையும் சட்ட, ஆத்மீக ஞானியும், சீர்திருத்தவாதியுமான அஷ்ஷெய்கு ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். 
“யாருக்காவது ஏதும் தேவைகள் நிறைவேற வேண்டுமாயின் முதலில் இரண்டு ரகாஅத் நபில் தொழ வேண்டும் நூறு விடுத்தம் அல்லது அதைவிட அதிகமாக றஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். இவ்வாறு செய்தால் கஷ்டங்கள் நீங்கும், தேவைகள் நிறைவேறும்.
ஆதாரம் : அல் இன்திபாபி ஸிலாஸிலத்தில் அவ்லியா 
மேலும் ஷாஹ் வலியுல்லஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள் “கஷ்டமான வேளைகளில் ரஸூலே அக்றம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமவர்களின் பரிசுத்தமான றூஹைக் கொண்டு உதவி தேட வேண்டும்.
ஆதாரம் : அத்தியப்புந்நிஅம், பக்கம் 22 
மேலும் மக்கியத்துல் ஹமஷியா என்ற நூலில் பின்வருமாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களிடத்தில் உதவி தேடி பண்ணிசைக்கின்றார்கள்.
சிருஷ்டிகளில் மேலான அருட் திருத்தூதரே! 
உங்களின் பேரருளை மறுமையில் வேண்டுகின்றேன்.
துன்பங்கள், துயரங்கள், கவலைகள் 
வந்திடும் போதெல்லாம் நீங்கள்தானே
அரணாகி என்னைக் காப்பாற்றுகின்றீர்கள்.
எனது முழுக் கவனமும் உங்கள் பக்கமே
திரும்பியிருக்கின்றது. 
எனக்கான ஆதாரமும் நீங்கள்தான்.
எனது நோட்டமும், தேட்டமும், வேட்கையும்
உங்களிடமே. 
உங்களை முழுமையாக நம்பியவனாக
உங்களையே ஆதரவு வைக்கின்றேன்.
ஆதாரம் : அத்தியப்புந்நிஅம், பக்கம் 4 
அஷ்ஷெய்கு அஹ்மது ஸர்ரூக் ரழியல்லாஹு அன்ஹு எகிப்தில் பிரபலமான அறிஞரும் ஸூபியுமாவார். புகாரீ ஷரீபின் விரிவுரையாளரான அல்லாமா கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கண்ணியத்திற்கும், பெருமைக்குமுரிய ஆசிரியருமாவார். இவர்கள் ஷாதுலியாத் தரீக்காவின் ஷைகுமாவார்கள். 
இவர்களின் ஒரு கவிதையை ஹதீஸ் கலையின் மாபெரும் அறிஞரான ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்தித் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் புஸ்தானுல் 
முஹத்திதீன் என்ற நூலில் எழுதியுளார்கள். அது வருமாறு, 
காலத்தின் கொடுமைகள்
கடுமையாக தாக்கும்போது
எனது முரீதின் சிதறிய
உள்ளங்களை ஒன்று
சேர்ப்பவனாக இருக்கின்றேன். 
என் முரீதே!
நெருக்கடியும் துன்பமும்
உன்னை ஆட்கொள்ளும்போது
யா ஸர்றுக் என்று என்னை அழையும்.
உடன் விரைந்து வந்து உனக்கு உதவுவேன்.
ஆதாரம் : புஸ்தானுல் முஹத்திதீன், பக்கம் 325 
ஹளரத் செய்யிது முஹம்மது இப்னு அஹம்தபர்ஜுல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்.
நான் கப்றில் ஆட்சி அதிகாரம் பெற்றவர். இதற்குரிய அனுமதியை அல்லாஹ{த்தஆலா எனக்கு வழங்கியுள்ளான். ஆதலால் தேவையுள்ளோர் எனது கப்று அருகில் வந்து எனது முகம் முன் நின்று முறையிட்டால் அதை நிறைவேற்றுவேன். 
ஆதாரம் : தபகாதுல் குப்றா, பாகம் 1, பக்கம் 105 
மாபெரும் வலியான ஹளரத் சம்சுத்தீன் முஹம்மது ஹனபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களது மரண வேளையில் இறைநேசர்களுக்கு பின்வருமாறு வஸிய்யத் செய்தார்கள். 
எனது கப்றுக்கும், உங்களுக்குமிடையில் ஒரு முழம் மண்தான் திரையாக உள்ளது. மனிதர்களுக்கு நான் இரங்குவதற்கு இம்மண் தடையாக இருக்குமாயின் நான் அங்கு இருந்தும் யாது பயன்? ஆதலால் ஏதும் தேவை உள்ளோர் எனது கப்றருகில் வந்து முறையிட்டால் அவர் தேவைகளை நிறைவேற்றுவேன். 
ஆதாரம் : தபகாதுல் குப்றா, பாகம் 2, பக்கம் 96 
இவ்வாறு கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரழியல்லாஹு அன்ஹு அவர்களும், ஏனைய அறிஞர்களும் வலிமார்களிடம் வஸீலாத் தேடுவதை அனுமதித்து அங்கீகரித்து உள்ளனர். என்பதை மேற்கண்ட அறிஞர்களின் தீர்ப்புக்களின் மூலம் தெளியலாம். 
உதவியின் அடித்தளம் எல்லாம் வல்ல அல்லாஹுவே என்றும், நல்லடியார்கள் உதவி வெளிவரும் வெறும் தளமாகவே இருக்கின்றனர் என்பதும் ஒரு முஃமினின் அடிப்படை நம்பிக்கையாகும். 
உலகில் உயிருள்ளவர், மரணித்தவர் எவரும் சுயமாக உதவி செய்யும் ஆற்றல் அற்றவராகவே இருக்கின்றார். அதனால் அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் மூலம் உதவி செய்வதில் உயிருள்ளவர், மரணித்தவர் என்ற பேதம் கிடையாது. 
எனவேதான் அல்லாஹ்வின் நெருங்கிய வலிமார்களிடம் உதவி தேடுவதனை ஷரீஅத் அங்கீகரித் துள்ளது. இதனைப் புரியாத சிலர் காபிர்கள் சிலைகளிடம் வேண்டுகின்ற பிரார்த்தனையை வலிமார்கள் விடயத்தில் சமப்படுத்தி வாதிக்கின்றனர். இது ஷரீஅத்திற்கு முற்றிலும் முரணான வாதமாகும். இவ்வாறு வாதிப்பது வழிகெட்ட கவாரிஜின்களின் வாதம் ஆகும்.