நபிமார்கள், வலிமார்கள் பெயரில் வழங்கப்படும்
பொதுமையான அன்னதானத்தையே கந்தூரி என்று அழைக்கின்றனர்.
பொதுவாக ஏழைகளும், ஏனையவர்களும் பாகுபாடின்றி சேர்ந்து புசிக்கும் உணவு கந்தூரி ஆகும். 
பல்வேறு நோக்கங்களுக்காக கந்தூரி கொடுக்கப்பட்டு வந்துள்ளதை வரலாற்று ரீதியாக நோக்க முடியும். 
ஊரில் பஞ்சம், இயற்கை அனர்த்தங்கள், நோய் நொடிகள் அகல்வற்கும் கந்தூரி கொடுத்து பிரார்த்திப்பார்கள். வயல்களில் அறுவடை முடிந்த பின்பும் பயிர்களில் நோய்கள் வந்திறங்காமல் பாதுகாப்புத் தேடியும் கந்தூரி கொடுப்பர். 
ஹதீஸ் கிரந்தங்களைப் பாராயணம் செய்து அதனை முடிக்கும்போதும் கந்தூரி கொடுப்பர்.
இப்படியாக கந்தூரிகள் பல்வேறு நோக்கங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படுகின்றன. 
பொதுவாக கந்தூரி வைபவங்களை மூன்று வகையாக நோக்கலாம்.

1. நபிமார்கள், வலிமார்கள் பெயரால் வழங்கப்படும் கந்தூரி

2. பலாய் முஸீபத்துக்கள் அகல வழங்கப்படும் கந்தூரி

3. அல்லாஹ்வின் பேரருளை வேண்டி வழங்கப்படும் கந்தூரி

கந்தூரியில் ஏழைகள்,


உலமாக்கள், நல்லவர்கள், நண்பர்கள், அயலவர்கள், உறவினர்கள் உள்ளிட்டவருக்கு உணவளிக்கும் சந்தர்ப்பங்கள் இதில் இருக்கி்ன்றன. அதனால் கந்தூரி வழங்குவதில் பின்வரும் சிறப்புக்கள் அடங்கியிருப்பதை அவதானிக்கலாம்.

1. சிறப்பான தர்மம்

2. குடும்ப உறவு

3. அயலவரின் உறவு

4. முஸ்லிம்களி்ன் குறிப்பாக ஏழைகளின் மனதைச் சந்தோஷப்படுத்தி கௌரவித்தல்

5. சாலிஹான நல்வருக்குரிய உபகாரம்

6. ஏழைகளுக்கு சுவையான உணவை வழங்கல்

7. பொதுவாக முஸ்லிம் சகோதரர்கள் யாவருக்கும் உணவளித்தல்

8. உணவில் முஸ்லிம்கள் சங்கமித்தல்

மேற்கண்ட எட்டு விடயங்கள் சொர்க்கத்தின் திருவாசலைத் திறக்கும் சாவிகளாக இருப்பது மட்டுமன்றி பஞ்சம், ஆபத்துக்கள், சோதனைகள், நோய்கள் உள்ளிட்டவைகளை விரட்டியடிப்பதுடன் அல்லாஹ்வின் கருணையையும் பாவ மன்னிப்பையும் ஈட்டித்தரும் ஆற்றல்களையும் கொண்டிருக்கின்றன.
நாம் செய்யும் வினைகளினால்தான் எமக்கு சோதனைகள் வருவதாக அல்குர்ஆன் 30 :34 வசனம் கூறுகின்றது.

எமது தவறுகளால் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் சோதனைகளிலிருந்து தப்புவதற்கு நன்மையான காரியங்களை அதிகமதிகமாய் நாம் செய்துவர வேண்டும். நன்மைகளை உயர்த்தும் நல்லமல்களாக தர்மம் செய்வது அன்னதானம் வழங்குவது அடங்கும் என்பதனை பின்வரும் ஹதீஸ்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

01. நிச்சயமாக தர்மம் அல்லாஹ்வின் கோபத்தை அணைத்துவிடும். கெட்ட மரணத்தையும் தடுக்கின்றது.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ஜாமிஉத் திர்மிதி (தர்மம் பற்றிய பாடம்), பாகம் - 01, பக்கம் - 84

02. நிச்சயமாக ஒரு முஸ்லிமின் தர்மம் ஆயுளை அதிகரிக்கச் செய்யும். தீய மரணத்தையும் தடுக்கும்.
அறிவிப்பவர் : அம்று இப்னு அவ்ப் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : முஃஜமுல் கபீர், பாகம் - 17, பக்கம் - 22, 23

03. தர்மம் பாவத்தை அணைக்கும், தீய மரணத்திலிருந்து பாதுகாக்கும்.
அறிவிப்பவர் : நபி இப்னு மகீதுல் ஜுப்பி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி கபீர்
ஆதாரம் : தர்கீப் வதர்ஹீப், பாகம் - 02, பக்கம் - 21

04. நிச்சயமாக அல்லாஹுத்தஆலா தர்மத்தின் மூலம், தீய மரணம் சம்பவிக்கும் எழுபது வாசல்களை அடைத்து விடுகின்றான்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : கிதாபுல் பர்ரு
ஆதார நூல் : தர்கீப், பாகம் 02, பக்கம் 21

05. தர்மம் எழுபது வகையான பாவங்களைத் தடுக்கின்றது. அதில் இலகுவானது வெண், கருங்குஷ்டங்களாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : கதீப் தாரீக் பக்தாத், பாகம் - 08, பக்கம் - 274

06. விடியற் காலையி(ஸுப்ஹி)ல் தர்மம் கொடுங்கள். பலாய் ஸதகாவை ஒருபோதும் முந்தாது.
அறிவிப்பவர் : அலி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி முஃஜமுல் அவ்ஸத், பாகம் - 06, பக்கம் - 299

07. ஸுப்ஹு நேரத்தில் கொடுக்கப்படும் தர்மம் ஆபத்துக்களைத் தட்டக் கூடியதாகும்.
அறிவிப்பவர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தைலமி பிர்தௌஸ், பாகம் - 04, பக்கம் - 414

08. தர்மம் கழாவில் (விதியில்) உள்ள தீயதைத் தட்டும்.
அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு அஸாகிர்
ஆதார நூல் : தஹ்தீப் தாரீக் திமஷ்க், பாகம் - 05, பக்கம் - 168

09. உங்களுக்கும் உங்களுடைய றப்புக்குமிடையில் அதிகமாக திக்று செய்வதாலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் தர்மம் செய்வதாலும் நீங்கள் இரணமளிக்கப்படுவீர்கள். உதவி செய்யப்படுவீர்கள். உங்களின் நெருக்கடிகள் சீர் செய்யப்படும்.
அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு மாஜா, பாடம் - ஜும்ஆவின் கடமை

10. குடும்ப உறவு செல்வத்தை அதிகரிக்கச் செய்யும், பரஸ்பரம் அன்பை ஏற்படுத்தும், ஆயுளை அதிகரிக்கும்.
அறிவிப்பவர் : அம்று இப்னு ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி, முஃஜமுல் அவ்ஸத், பாகம் - 08, பக்கம் - 397

11. நிச்சயமாக நன்மையான காரியங்களில் விரைவாக கூலி கொடுக்கப்படும் நன்மையானது குடும்ப உறவைப் பேணுவதாகும். குடும்பத்தினர் பாஸிக் - பாவிகளாக இருப்பினும் கூட அவர்களின் உறவைப் பேணுவதால், முதல் பெருகும் அதன் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அறிவிப்பவர் : அபீபகறா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி
ஆதார நூல் : மஜ்உஸ்ஸவாயித் பாகம் - 1, பக்கம் - 152

12. குடும்ப உறவைப் பேணும் எந்த ஒரு வீடும் தேவையுள்ளதாக ஒரு போதும் இருக்காது. (அதாவது வறுமை இருக்காது)
நூல் : இப்னு ஹிப்பான்

13. குடும்ப உறவு, நற்குணம், அயலவர்களுடனான நல்லுறவு ஊரை செழிப்படையச் செய்யும், ஆயுளில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
அறிவிப்பவர் : உம்முல் முஃமினீன் ஆயிஷா ஸித்தீகா ரழியல்லாஹு அன்ஹா
நூல் : அஹ்மத் - பைஹகி, சுஃபுல் ஈமான், பாகம் - 6, பக்கம் - 226

14. முஸ்லிமான உனது சகோதரனின் உள்ளத்தில் சந்தோசத்தை ஏற்படுத்தி வைப்பது, மன்னிப்பை வாஜிபாக்கி வைக்கக்கூடியதாகும்.
அறிவிப்பவர் : இமாம் ஹஸன் பின் அலி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி, முஃஜமுல் கபீர் பாகம் - 3, பக்கம் - 83,85

15. பர்ழான கடமைகளுக்குப்பின் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான அமல், முஸ்லிமான ஒருவரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஆதார நூல் : இத்திஹாபுஸ்ஸஆதா, பாகம் - 6, பக்கம் - 293

16. அமல்களில் மேலானது முஃமினின் மனதைச் சந்தோசப்படுத்துவதாகும். உடை வழங்குதல், பசியைப் போக்குதல் அவன் தேவையை நிறைவேற்றல் (மூலம் இதனைச் செய்யலாம்)
அறிவிப்பவர் : உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தர்கீப் வதர்ஹீப், பாகம் - 3, பக்கம் - 394

17. தனது முஸ்லிமான சகோதரனின் மனம் விரும்பும் உணவைக் கொடுப்பவனை விட்டும் அல்லாஹுத்தஆலா நரகத்தை ஹராமாக்கிவிட்டான்.
அறிவிப்பவர் : அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : சுஃபுல் ஈமான், பாகம் - 2, பக்கம் - 222

18. ஏழை முஸ்லிம்களுக்கு உணவு வழங்வது றஹ்மத்தை ஈட்டித்தரும் செயலாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ஹாகிம், முஸ்தத்றக், பாகம் - 2, பக்கம் - 524

19. உணவளித்தல், ஸலாம் கூறல், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் தொழுதல், இவை பாவத்தை அழிக்கக்கூடிய கப்பாறாவாகும்.
அறிவிப்பவர் : அபூஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : ஹாகீம், முஸ்தத்றக், பாகம் - 04, பக்கம் - 129

20. யாராவது தனது முஸ்லிம் சகோதரனுக்கு வயிறு நிறைய உணவளித்து தாகம் தீர நீர் புகட்டினால் நரகத்தின் ஏழு கணவாய்க்கு அப்பால் அவனைத் தூரமாக்குவான். ஒவ்வொரு கணவாயும் ஐநூறு வருட தொலை தூரத்தைக் கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல் : தப்றானி, கபீர்
ஆதார நூல் : தர்கீப் வதர்ஹீப், பாகம் - 02, பக்கம் - 65

21. தனது அடியார்களுக்கு உணவளிப்போரைப் பற்றி அல்லாஹுத்தஆலா மலக்குமார்களிடம் பெருமையாகப் பேசிக் கொள்வான்.
அறிவிப்பவர் : அபூ ஷெய்கு
ஆதார நூல் : தர்கீப், பாகம் - 02, பக்கம் - 68

22. நன்மையும், பறக்கத்தும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும் வீட்டை நோக்கி விரைவான குதிரை தனதிடத்தை நோக்கி விரைந்து வருவதை விட வேகமாக வந்தடையும்.
அறிவிப்பவர் : இப்னு அவ்பர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு மாஜா, பாடம் - விருந்தோம்பல்

23. விருந்தாளி றிஸ்க்கைக் கொண்டு வருகின்றார். உணவளிப்போரின் பாவத்தை எடுத்துச் செல்கின்றார். அவர்களின் பாவங்களை அழித்து விடுகின்றார்.
அறிவிப்பவர் : அபூஷெய்கு
நூல் : கன்ஸுல் உம்மால், பாகம் - 09, பக்கம் - 242

24. எனது முஸ்லிம் சகோதரர்களை ஒன்று திரட்டி ஒரு சாஉ அல்லது இரு சாஉ (இரண்டு கொத்து அல்லது நான்கு கொத்து) அளவு சமைத்து உணவளிப்பது கடைத்தெருக்குச் சென்று அடிமையை வாங்கி உரிமை விடுவதைவிட மேலாகக் கருதுகின்றேன் என்று அலி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
ஆதாரம் : ஸுனன் அபூதாவூத், பாகம் - 02, பக்கம் - 172

25. ஸஹாபிகள் நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் திருச்சமுகம் வந்து, அல்லாஹ்வின் திருத்தூதரே! நாங்கள் உண்கின்றோம். ஆனால் வயிறு நிரப்பியதாகக் காணோம் என்று முறையிட்டனர். நீங்கள் தனியாக உண்கின்றீர்களா? சேர்ந்து உண்கின்றீர்களா? என்று கேட்டார்கள். தனித்தனியாக உண்ணுகின்றோம் என்றனர். நபியவர்கள் நவின்றார்கள். சேர்ந்து சாப்பிடுங்கள் அல்லாஹ்வின் திருப்பெயரைக் குறிப்பிடுங்கள் அதில் உங்களுக்கு பறக்கத் சொரியப்படும்.
அறிவிப்பவர் : வஹி இப்னு ஹர்பு ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு மாஜா, அபூ தாவூத், பாகம் - 02, பக்கம் - 172

26. சேர்ந்து உண்ணுங்கள் பிரிந்து சாப்பிட வேண்டாம் சேர்ந்து உண்பதில்தான் பறக்கத் உள்ளது.
அறிவிப்பவர் : உமர் பாறூக் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : இப்னு மாஜா

27. பறக்கத் மூன்றில் உள்ளது 1. முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பில் 2. தரீத் என்ற உணவில் 3. ஸஹர் உணவில்
அறிவிப்பவர் : ஸல்மானுல் பாரிஸி ரழியல்லாஹு அன்ஹு
நூல் : தப்றானி கபீர், பாகம் - 06, பக்கம் - 151

28. அதிகமான கரங்கள் சேரும் உணவுதான் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான உணவாகும்.
அறிவி்பபவர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு
ஆதாரம் : தப்றானி, தர்கீப், பாகம் - 03, பக்கம் - 134

மேற்கண்ட ஹதீதுகளின் மூலம் பின்வரும் பயன்களைப் பெருகின்றோம்.

01. உணவளிப்பதன் மூலம் அல்லாஹ்வின் உதவியால் தீய மரணத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றோம்.

02. ஆயுளில் அதிகரிப்பு ஏற்படுகிறது.

03. விசாலமான இரணம் கிட்டுதல், செல்வம் பெருகுதல்

04.. பிறரிடம் கையேந்தா நிலை ஏற்படல்

05. நன்மைகளும், பறக்கத்தும் பெற்று பெருவாழ்வு கிட்டல்

06. ஆபத்துக்கள் தூரமாதல்

07. ஊர் செழிப்படைதல்

08. அச்சம் அகன்று நிம்மதியான சூழல் ஏற்படல்

09 அல்லாஹ்வின் பொருத்தம் கிட்டல்

10. அல்லாஹ்வின் கோபத்தை தணித்தல்

11. பாவமன்னிப்பு பெறல்

12. நரகத்தின் சீற்றத்தை அணைத்தல்

13. அடிமையை உரிமையிடுவதை மிகைத்த கூலியைப் பெறல்

14. சன்மார்க்க வாதிகளுக்கு உதவிய நற்கூலிபெறல்

15. மலக்குகளிடம் அல்லாஹ்வின் பாராட்டைப்பெறல்

16. மறுமையில் பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படல்
போன்ற பயன்களை உணவளித்தல் மூலம் பெறுகின்றோம்