தொடர் 04
அதிசங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
இவ் வரலாற்றைக் கூறும் இமாம் அத்பி(றழி) அவர்களும், இவ் வரலாற்றை மேற்கோள்காட்டிப் பேசும் இமாம் சுப்யான் பின் உஐனா (றழி) அவர்களும், சாதாரண அறிவுடையவர்களல்லர்.
ஷாபி மத்ஹபை ஸ்தாபித்த இமாம் ஷாபி (றஹ்) அவர்களின் ஆத்மீக ஞானாசிரியர்களாவார்கள். இமாம் ஷாபி (றஹ்) அவர்களின் மத்ஹபை பின்பற்றி வாழும் நாம் அவர்களின் ஞானகுருக்களின் சொல்லை தட்டிக் கழிக்கவோ, அல்லது அதிற் சந்தேகங்கொள்ளவோ முடியாது.
இமாம் அத்பீ(றழி) அவர்கள் கூறும் வரலாறு நபீ(ஸல்) அவர்களை “சியாரத்” செய்வது பற்றியும், அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றியும், அவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்பது பற்றியும், அவர்களிடம் “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பது பற்றியும் தெளிவாகக் கூறுகின்றது.
நபீ(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்களின் பின்னர் அவர்களின் கப்றடிக்கு ஒரு அறபி வந்து அவர்களின் கப்றில் விழுந்து அங்குள்ள மண்ணை தலையில் போட்டுக் கொண்டு அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் சொன்னீர்கள் நாங்கள் கேட்டு வந்தோம்
அல்லாஹ் உங்கள் விஷயமாகத் திருக்குர்ஆனிலே அவர்கள் தமக்கு அநீதி செய்து கொண்டு உங்களை நாடி உங்கள் காலடிக்கு வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு நீங்களும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்கள்
அல்லாஹ்வைப்பாவமன்னிப்பளிப்பவனாகவும்,அன்புள்ளவனாகவும் பெற்றுக் கொள்வார்கள் எனக் கூறியுள்ளான்.
‘நாயகமே! நான் எனக்கு அநீதி செய்து கொண்டேன். பாவமன்னிப்பத் தேடியவனாக உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கெஞ்சிக் கேட்டார். நபீ(ஸல்) அவர்களின் கப்றில் இருந்து உனது குற்றம் மன்னிக்கப்பட்டதென்று ஒரு சப்தம் கேட்டது.
இந்த வரலாறு ஹஸ்ரத் அலீ(றழி) அவர்கள் கூறியதாக இமாம் அபூ ஸயீத் அஸ்ஸம் ஆனி (றஹ்) அவர்கள் அறிவித்திருப்பதாக அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் “அல் ஜவ்ஹறுல் முனள்ளம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த வரலாறும் நபீ(ஸல்) அவர்களை “ஸியாரத்” செய்வது பற்றியும், அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றியும், அவர்களிடம் பாவமன்னிப்புக் கேட்பது பற்றியும், அவர்களிடம் “ஷபாஅத்” மன்றாட்டம் கேட்பது பற்றியும் தெளிவாகக் கூறுகின்றது.
மேலும் நபீ(ஸல்) அவர்களின் புனித கப்றிலுள்ள மண்னைத் தலைமேல் போட்டுக் கொள்வது பற்றியும் விவரிக்கின்றது.
நபீ(ஸல்) அவர்களின் புனித கப்றிலுள்ள மண்ணைத் தலையில் போட்டுக் கொண்ட அந்த ஸஹாபி ஏன் அவ்வாறு செய்தார் என சற்று ஆராய்ந்து பார்த்தால் நபீ(ஸல்) அவர்கள் மீது அவருக்கு இருந்த அன்புதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை என்பதும் தெளிவாகும்.
ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்கு வந்து “இறைவா! இவர் உனது “ஹபீப்” நண்பர். நான் உனது அடிமை, ஷெய்தான் உனது பகைவன், நீ எனது குற்றத்தை மன்னித்தால் உனது நண்பர் மகிழ்ச்சி அடைவார். உனது அடிமை வெற்றி பெறுவான். உனது விரோதி கோபமடைவான்.
நீ எனது குற்றத்தை மன்னிக்காவிட்டால் உனது நண்பர் கோபமடைவார். உனது விரோதி திருப்தி அடைவான். உனது அடிமை அழிந்து விடுவான். நீ சங்கையுள்ளவன் உனது அடிமை அழிந்து போவதையும், உனது நண்பர் கோபமடைவதையும், உனது விரோதி திருப்பியடைவதையும் நீ விரும்பமாட்டாய்.
“இறைவா! அறபு மக்களில் யாராவது ஒரு தலைவன் மரணித்துவிட்டால் அவனுடைய கப்றில் உரிமையிடுவார்கள். இவரோ உலக மக்களின் தலைவர். இவருடைய கப்றில் என்னை உரிமையிடுவாயாக!” என்று வேண்டிநின்றார்.
இவ் வரலாறை அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் தங்களின் “அல் ஜவ்ஹறுல் முனள்ளம்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு சமயம் ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்கு வந்து “இறைவா! அடிமைகளை உரிமையிடுமாறு நீ பணித்திருக்கின்றாய் இவர் உனது நண்பர். நான் உனது அடிமை. எனவே உனது ஹபீபுடைய கப்றில் என்னை உரிமையிட்டு விடு” என்று கேட்டார்.
அப்பொழுது உன்னை மட்டும் உரிமையிடுமாறு கேட்கின்றாயே! உலகிலுள்ள அனைத்து விசுவாசிகளுக்காகவும் கேட்க வேண்டாமா? உன்னை உரிமையிட்டேன். சென்றுவா என்று ஒரு அசரீரி கேட்டது.
இந்த வரலாறை இமாம் ஹஸ்தல்லானி (றஹ்) அவர்கள் தங்களின் “அல்மவாகிபுல்லதுன்னிய்யா” எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.
ஒரு சமயம் மதீனா வாசிகளுக்கு கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. நபித்தோழர்கள் அன்னை ஆயிஷா நாயகி (றழி) அவர்களிடம் முறையிட்டனர்.
ஆயிஷா நாயகி (றழி) அவர்கள் நபித்தோழர்களை நோக்கி நபீ(ஸல்) அவர்களின் கப்றடிக்குச்சென்று அதிலிருந்து வானம் தெரியுமளவு ஒரு துவாரம் இட்டு கப்றுக்கும், வானத்துக்குமிடையில் முகடில்லாமல் ஆக்குங்கள் என்று கூறினார்கள்.
நபித்தோழர்களும் அவ்வாறே செய்தனர். அப்பொழுதே பெருழை பெய்யத்தொடங்கியது. புற்பூண்டுகள் முளைத்துச் செடிகொடிகள் யாவும் செழித்து வளரலாயின. ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால் நடைகள் பெருகத் தொடங்கின. அவை அளவுக்கதிகமாகப் பொருத்து கடுமையான கொழுப்பு ஏற்பட்டதனால் கால் நடைகள் வெடிக்கத் தொடங்கின.
இந்த விபரத்தை அல்லாமா, அஸ்ஸெய்யித் அஸ்ஸம்ஹூதி (றஹ்) அவர்கள் தங்களின் “குலாஸதுல் வபா” எனும் நூலில் ஹஸ்ரத் அபுல் ஜவ்ஸா (றழி) அவர்களைத் தொட்டும் இமாம் தாரமீ (றஹ்) அவர்கள் தங்களின் தாரமீயில் எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
கொழுப்பு அதிகரித்துக் கால் நடைகள் வெடித்ததால் அந்த வருடம் “ஆமுல் பத்க்” வெடிப்பு வருடம் என்றழைக்கப்பட்டதாக அல்லாமா முறாகீ (றஹ்) அவர்கள் கூறியுள்ளதாக இமாம் யூஸூப் அந்நபஹானி (றஹ்) அவர்கள் தங்களின் “ஷவாகிதுல் ஹக்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு சமயம் ஒரு அறபி நபீ(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களைக் கொண்டு மழைபெய்ய வேண்டினார்கள். அதைத் தொடர்ந்து பல பாடல்களும் பாடினார்கள். அவற்றின் இறுதியில் . . . . . .
“வலைஸலனா இல்லா இலைக்க பிறானுனா வஅய்ன பிறாறுல் கல்கி இல்லா இலர்றுஸ்லி”
(உங்ளைத் தவிர நாங்கள் ஒதுங்குமிடம் எமக்கில்லை. சிருஷ்டிகள் றசூல்மார்களிடமின்றி வேறெங்குதான் ஒதுங்கும்?) என்று பாடினார்.
நபீ(ஸல்) அவர்கள் அவர்களின் பாடலைக் கேட்டுக் கொண்டு இருந்தார்களேயன்றி அதை மறுக்கவில்லை. இந்த ஹதீதை அறிவித்த அனஸ் (றழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த அறபி இந்தப் பாலைப் பாடி முடித்தவுடன் நபீ(ஸல்) அவர்கள் எழுந்து தங்களின் போர்வையை நிலத்தில் இழுத்துக்கொண்டு மிம்பறை-பிரசங்க மேடையை நோக்கி விரைந்தார்கள். மிம்பரில் ஏறிய நபீ(ஸல்) அவர்கள் பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தி விட்டு அவர்களுக்காக துஆச் செய்தார்கள். நபீ(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நிற்கும் போதேபெரு மழைபெய்யத் தொடங்கியது.
ஆதாரம் – பைஹகீ
அறிவிப்பு – அனஸ் (றழி)
உங்களைத் தவிர நாங்கள் ஒதுங்குமிடம் எமக்கு இல்லை. சிருஷ்டிகள் றசூல்மார்களிடமேயன்றிவேறெங்குதான் ஒதுங்குவார்கள்? எனும் அந்த ஸஹாபியின் பாடல் வஸீலா எனும் உதவி தேடுதலை தெளிவாகக் காட்டுகிறது.
அந்த ஸஹாபி நபீ(ஸல்) அவர்களின் முன்னிலையில் பாடியிருந்தும் அவர்கள் அது பற்றி ஒன்றும் பேசாமல் மொளனமாயிருந்தது அவர்கள் அப் பாடலை சரி கண்டுள்ளார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும்.
நபீ(ஸல்) அவர்களின் முன்னிலையில் செய்யப்பட்ட ஒரு செயலை, அல்லது பேசப்பட்ட ஒரு பேச்சை அவர்கள் சரியென்று சொல்லாமலும், பிழையென்று சொல்லாமலும் மொளனமாகயிருந்தார்களாயின் அச்செயல் அல்லது அந்தப்பேச்சு இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகிவிடும்.
இது அனைத்து இமாம்களும் ஏகோபித்துச் சொன்ன ஒரு முடிவாகும். இதனடிப்படையில் அந்த ஸஹாபி பாடிய பாடல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பாடல் என்பது தெளிவாகி விட்டது.
இப்படியான கருத்துக்ளைக் கொண்ட பாடல்களைத் தான் வஹ்ஹாபிகள் மறுத்து வருகின்றார்கள். இத்தகைய பாடல்களை “ஷிர்க்” என்றும், இணைவைத்தல் என்றும், அறியாமையிலிருக்கும் அவர்கள் கூறுகின்றனர்.
வஸீலாக் கோரும் கஸீதாக்கள்
இது போன்ற கருத்துக்ளைக் கொண்ட “வஸீலா” உதவிகோரும் “கஸீதா” பாடல்கள் நிறையவுள்ளன. அவற்றில் சில பாடல்களை நாம் கவனிப்போம்.
“யாஸெய்யிதீ யாறஸூல்ல்லாஹி குத்பியதீ மாலீ சிவாக வலா அல்வீ இலா அஹதின்”
பதினெட்டு அடிகளைக் கொண்ட பாடல் தொகுப்பின் முதலடி தான் இந்த அடி இதன் பொருள்.
“எனது தலைவரே! அல்லாஹ்வின் றஸூலே!” எனது கைபிடித்து காப்பாற்றுங்கள். உங்ளைத் தவிர வேரு யாருமில்லை.வேரு யார் பக்கமும் நான் ஒதுங்கவும் மாட்டேன்.
இப்பாடல் தொகுப்பு பதினெட்டு அடிகளும் கருங்கல்லில் பொறிக்கப்பட்டு திரு மதீனா நகரில் உள்ள நபீ(ஸல்) அவர்களின் “றவ்ழாஷரீபின்” சுவரில் துருக்கியரின் ஆட்சிக்காலத்தில் பெறிக்கப்பட்டிருந்தது.
வஹ்ஹாபிஸத்துக்கு வித்திட்ட நஜ்தி ஸாகிபுவின் எஜமான் இப்னு ஸூஊத் என்பவன் சவூதி அரேபியாவை ஆட்சிசெய்த காலத்தில் கறுப்புமையைக்கொண்டு அந்தப் பாடல்ளை அழித்து விட்டான். எனினும் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இன்றும் அந்தப் பாடல் தெரியும்.
இந்தப் பாடலைப் பாடியவர் யாரென்பது பற்றி தெளிவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பாடியதென்றும் சொல்லப்படுகின்றது.
( தொடரும்.........)