(தொடர் 05.....)
அதிசங்கைக்குரிய ஷெய்குனா
மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள்
யார் பாடியிருந்தாலும் பாடலின் கருத்து திருக்குர்ஆனுக்கும் நபீ(ஸல்) அவர்களின் நிறை மொழிக்கும் மாற்றமில்லாதிருப்பதால் அந்தப் பாடலைப் பாடுவதில் எவ்விதக்குற்றமும் கிடையாது.
ஒரு அறபீ நபீ(ஸல்) அவர்களிடம் வந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பற்றி முறையிட்டார் அப்பொழுது நபீ(ஸல்) அவர்கள் “துஆ”ச் செய்தார்கள். அக்கனமே மேகம் திரண்டு வந்து பெருமழை பெய்யத் தொடங்கியது.
அப்பொழுது நபீ(ஸல்) அவர்கள் “அபூதாலிப்” உயிருடன் இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார். என்று கூறிவிட்டு அவரின் பாடலைப்பாட யாருண்டு? என்று வினவினார்கள்.
அங்கு வீற்றிருந்த வீரர் அலீ(றழி) அவர்கள் நாயகமே! அவரின் பாடலையா கேட்கின்றீர்கள். என்று கேட்டு விட்டு
“வஅப்யளு யுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹி திமாலுல் யதாமா இஸ்மதுன் லில் அறாமிலி” என்று பாடிக்காட்டினார்கள்.
இப்பாடலின் பொருள்:- “நபீ(ஸல்) அவர்கள் வென்மையானவர்கள். அவர்களின் பெருட்டைக் கொண்டு மழை தேடப்படும். அவர்கள் அனாதைகளுக்கு அன்பு காட்டி விதவைகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள்.”
அலீ(றழி) அவர்கள் இந்தப் பாடலைப் பாடியதும் நபீ(ஸல்) அவர்களின்முகம் மலர்ந்தது. அந்தப் பாடலை நபீ(ஸல்) அவர்க்ள மறுக்கவுமில்லை. “யுஸ்தஸ்கல் கமாமு பிவஜ்ஹிஹி” அவர்களின் பொருட்டினால் மழை தேடப்படும் என்ற வசனத்தை மறுக்கவுமில்லை.
ஆதாரம் ; புகாரி
இது வரை கூறிய ஹதீதிலிருந்தும் வரலாறுகளிலிருந்தும் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்று விளங்குகின்றது. நபீ(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு வஸீலாத் தேடுவதை நபீ(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது.
ஹஸ்ரத் சவாத் பின் காரிப்(றழி) அவர்கள் ஸகாபாக்களில் ஒருவர் நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்து நீண்ட பாடலொன்று பாடியுள்ளார்கள்.
நபியவர்களைப் புகழ்ந்து பாடிய பாடலை அவர்களுக்கு முன்னால் பாடிக்காட்ட விருந்த அந்தச் ஸகாபிக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கிட்டுயது. நபீ(ஸல்) அவர்கள் முன்னிலையில் அவர் பாடிக்காட்டினார். நபீ(ஸல்) அவர்களும் அவர் பாடியதைக் கேட்டுக் கொண்டிருந்தார்களேயன்றி அதை ஆட்சேபிக்கவில்லை.
ஸஹாபி சவாத் பின் காரிப்(றழி) அவர்கள் தனது பாடலில் ஓரிடத்தில் “வஅன்னக அத்னல் முர்ஸலீன வஸீலதன்” என்றும் இன்னுமோரிடத்தில் “வகுன்லீ ஸபீஅன் யவ்ம லாதூ ஷபாஅத்தின்” என்றும் பாடியுள்ளார்கள்.
“வஅன்னக அத்னல் முர்ஸலீன வஸீலதன்” (நாயகமே! நீங்கள் றஸீல் மார்களில் வஸீலாவால் மிக நெருங்கியவர்கள்)
“வகுன்லீ ஸபீஅன் யவ்ம லாதூ ஷபாஅத்தின்” (மன்றாடுபவர்கள் இல்லாத நாளில் நீங்கள் எனக்கு மன்றாடக்கூடியவர்களாக இருந்து கொள்ளுங்கள்) என்பது இவ்விரு அடிகளினதும் பொருளாகும். இவ்விரு அடிகளும் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதையும், அவர்களிடம் மன்றாடக் கேட்பதையும் வலியுறுத்துகின்றன.
இவ்விரு அடிகளும் தருகின்ற கருத்து பிழையானதாகவும், வஹ்ஹாபிகள் சொல்வது போல் “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்திருந்தால் நிச்சயமாக நபீ(ஸல்) அவர்கள் அக்கணமே அதனைத் தடுத்திருப்பார்கள்.
ஆனால் அவ்வாறன்றி மகிழ்ச்சியுடன் நபீ(ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியின் “கஸீதா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தது அவர்கள் அதனைச்சரிகண்டார்கள் என்பதற்குப் போதிய ஆதாரமாகும்.
ஆதாரம் : அல் கபீர்
ஆசிரியர் : இமாம் தபறானி (றஹ்)
நபீ(ஸல்) அவர்களின் வபாத்துக்குப் பிறகு அவர்களின் மாமி முறையான சபிய்யா நாயகி (றழி) அவர்கள் ஒரு பாடலின் மூலம் நபீ(ஸல்) அவர்களைப் புகழ்ந்தார்கள்.
அந்தப் பாடலின் ஓர் இடத்தில். . . . . .
“அலா யாறஸூலல்லாஹி அந்த றஜாஉனா வகுந்த பினா பர்ரன் வலம்தகு ஜாபியா”
என்று பாடினார்கள். இதன் கருத்தாவது அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் எங்களின் ஆதரவும், ஆதாரமுமாவீர்கள். நீங்கள் எங்களை வெறுக்காமல் நன்றி உள்ளவராகவே இருந்தீர்கள்” என்பதாம்.
சபிய்யா நாயகியின் இந்தப் பாடலை ஸஹாபாக்களும் கேட்டார்கள். எனினும் எவரும் எவ்வித மறுப்பும் கூறவில்லை. குறிப்பாக “அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் தான் எங்களின் ஆதாரமும், ஆதரவுமாவீர்கள்” என்ற கருத்தைப் பற்றியும் ஸஹாபாக்கள் ஒன்றும் சொல்லவில்லை.
ஆதாரம் ; ஷவாஹிதுல் ஹக்
இந்த வரலாறின் மூலமாகவும் வஸீலாவிவகாரம் தெளிவுபடுத்தப்படுகிறது. போலி வஹ்ஹாபிகளின் பொய் வாதம் நிராகரிக்கப்படுகிறது.
மேலும் சில ஆதாரங்கள்
“இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் பக்தாத் நகரிலிருந்த காலத்தில் அங்குள்ள “அஃளமிய்யா” எனுமிடத்தில் சமாதி கொண்டிருக்கும் அபூ ஹனீபா(றஹ்) அவர்களின் கப்றடிக்குச் சென்று அவர்களுக்கு சலாமுரைத்து தங்களின் தேவைக்காக அவர்களைக் கொண்டு வஸீலாவும் தேடுவார்கள்” என அல்லாமா இப்னு ஹஜர் (றஹ்) அவர்கள் தங்களின் “அல்கைறாத்துல் ஹிஸான் பீ மனாக்கிபில் இமாமி அபீஹனீபதன் நுஃமான்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மத்ஹபுடைய இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (றஹ்) அவர்கள் இமாம் ஷாபி(றஹ்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடினார்கள். இதைக் கண்ட இமாம் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வியப்புற்று நின்றார். அவரை நோக்கி இமாமவர்கள் “மகனே! இமாம் ஷாபி(றஹ்) அவர்கள் மனிதர்களுக்குச் சூரியன் போன்றவர்களும், உடலுக்கு ஆரோக்கியம் போன்றவர்களுமாவர்” எனக் கூறினார்கள்.
மொரோக்கோ நாட்டு மக்கள் இமாம் மாலிக்(றஹ்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுகிறார்கள் என ஷாபி இமாமவர்களிடம் தெரிவிக்கப்பட்ட பொழுது இமாமவர்கள் எவ்வித மறுப்பும் கூறவில்லை.
யாருக்காவது அல்லாஹ்விடம் ஒரு தேவையிருந்து அதையவர் பெற்றுக்கௌ்ள விரும்பினால் இமாம் கஸ்ஸாலி(றஹ்) அவர்களைக் கொண்டு “வஸீலா” உதவி தேடவும், என்று ஷாதுலிய்யாஹ் தரீக்காவின் இஸ்தாபகர் “குத்புஸ்ஸமான்” அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலி (றஹ்) அவர்கள் அருளியுள்ளார்கள்.
“இமாம் ஷாபி (றஹ்) அவர்கள் நபீ (ஸல்) அவர்களின் சந்ததிகளைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளார்கள்” என்று அல்லாமா இப்னு ஹஜர் (றழி) அவர்கள் தங்களின் “அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா லி அஹ்லிள் ளலாலி வஸ்ஸந்தகா” எனும் நூலில் குறித்துள்ளார்கள்.
ஸஹீஹான ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான “துர்முதி”யின் ஆசிரியர் அறிஞர் அல்லாமா அல் இமாம் அபூ ஈஸா அத்துர்முதீ (றஹ்) அவர்கள் ஒரு நாள் அல்லாஹ்தஆலாவை கனவில் கண்டபொழுது ஈமானை பாதுகாத்து அந்த ஈமானுடனேயே மரணிப்பதற்கு வழி என்னவென்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்தஆலா இமாம் துர்முதி(றஹ்) அவர்களுக்கு ஒரு துஆவை சொல்லிக் கொடுத்து அதை ஸூப்ஹூத் தொழுகைக்கு முன்னாலும், பின்னாலும் ஓதிவருமாறு கட்டளையிட்டான்.
இமாமவர்கள் தினமும் அந்த துஆவை ஓதிவந்ததோடு தனது நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் ஓதிவருமாறு பணித்தார்கள். அல்லாஹ் கற்றுக் கொடுத்த துஆ இதுதான்.
إلهى بحرمة الحسن وأخيه وجدّه وبنيه وأمّه وأبيه نجّني من الغمّ الذي أنا فيه يـاحيّ يـا قيـّوم يـاذا الجلال والإكرام أسألك أن تحيي قلبي بنور معرفتك يــا الله يــاالله يــاارحم الراحميـن.
“இலாகீ பிஹூர்மதில் ஹஸனி வஅகீஹி வஜத்திஹிவ வபனீஹி வஉம்மிஹீ வஅபீஹி நஜ்ஜினீ மினல் கம்மில்லதீ அனபீஹி யாஹைய்யு யாகையூம் யாதல்ஜலாலி வல்இக்றாம் அஸ்அலுக அன்துஹ்யிய கல்பீ பிநூரி மஃரிபதிக யாஅல்லாஹ் யாஅல்லாஹ் யாஅல்லாஹ் யா அர்ஹமர் றாஹிமீன்”
இதன் பொருளாவது “இறைவா! ஹஸன் (றழி) அவர்களின் பொருட்டைக் கொண்டும், அவர்களின் சகோதரன், பாட்டன், பிள்ளைகள், தாய், தந்தை முதலானோரின் பொருட்டைக் கொண்டும் நானிருக்கும் துக்கத்திலிருந்து என்னை ஈடேற்றமாக்கி வைப்பாயாக! உனது ஞானம் என்ற ஒளி கொண்டு எனது கல்பை பிரகாசமாக்கி வைப்பாயாக!” என்பதாகும்.
இத் தகவலை அஸ்ஸெய்யித் தாஹிர் பின் முஹம்மது காசிம் பா அலவி (றஹ்) அவர்கள் தங்களின் “மஜ்மஉல் அஹ்பாப்” எனும் கிரந்தத்தில் கூறியிருப்பதாக இமாம் நபஹானி (றஹ்) அவர்கள் தங்களுடைய “ஷவாகிதுல்ஹக்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ் வரலாற்றில் இருந்து இமாம் துர்முதி(றஹ்) அவர்கள் ஹஸன் (றழி) அவர்களைக் கொண்டும், அவரது குடும்பத்தவரைக் கொண்டும் வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும், அவ்வாறு வஸீலா தேடுமாறு அல்லாஹ் தான் அவர்களைப் பணித்தான் என்பதும் நன்கு தெளிவாகின்றது.
ஒரு அடியான் ஸூப்ஹூத் தொழுகைக்குப் பிறகு மூன்று தரம் “அல்லாஹூம்ம றப்ப ஜிப்ரீல, வமீகாயீல, வயிஸ்றாபீல, வஇஸ்றாயீல,வமுஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அஜிர்னீ மினன்னார்” என்று கூறுமாறு நபீ(ஸல்) அவர்கள் பணித்தார்கள்.
இதன் பொருளாவது ; “ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல்(அலை) ஆகியோரினதும் நபீமுஹம்மத் (ஸல்) அவர்களினதும் றப்பே! நரகிலிருந்து என்னை ஈடேற்றமாக்கி வைப்பாயாக!”
அல்லாஹ் சகல சிருஷ்டிகளினதும் றப்பாக இருக்கும் பொழுது நான்கு அமரர்களையும், நபீ(ஸல்) அவர்களையும் குறிப்பாகச் சொல்லி இவர்களின் றப்பு என்று கூறியதிலிருந்து குறிப்பாக இவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.
ஆதாரம் : ஷர்குல் அக்தார்
அறிவிப்பு : இமாம் நவவி (றஹ்)
ஆசிரியர் : இப்னு அல்லான் (றஹ்)
வஸீலாத் தேடலாமா?எனும் தலைப்பில் இதுவரை நான் கூறிய ஆதாரங்களிலிருந்தும், விபரங்களிலிருந்தும்நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவதும், நபியல்லாத ஒருவரைக் கொண்டு வஸீலாத் தேடுவதும், அவர்கள் உயிரோடிருக்கும் போது தேடுவதும், அவர்கள் மரணித்த பிறகு தேடுவதும், அவர்களின் பொருட்டைக் கொண்டு தேடுவதும், அவர்களிடம் நேரடியாகக் கேட்பதும் மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட விடயங்கள் என்பது தெளிவாகிவிட்டது.
இது வரை கூறிய ஆதாரங்கள் யாவும் ஒரு நபியின் பொருட்டைக் கொண்டும், நபியல்லாத ஒருவரின் பொருட்டைக் கொண்டும், வஸீலாத் தேடுவதற்கான ஆதாரங்களாகும். அதாவது, ஆளைக் கொண்டு வஸீலாத் தேடுவதற்கான ஆதாரங்களாகும்.
ஒரு நபரைக் கொண்டு வஸீலாத் தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விஷமாயிருப்பது போல் ஒரு நபர் செய்த அமலைக் கொண்டு அவரது செயலைக் கொண்டு அனுமதிக்கப்பட்ட விஷயமேயாகும். இதைப் பற்றி இங்கு ஆராய்வோம்.
அமலைக் கொண்டு வஸீலாத் தேடுதல்
“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்)
“இஸ்தயீனூ பிஸ்ஸப்ரி வஸ்ஸலாத்தி” (பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் நீங்கள் உதவி தேடுங்கள்)
திருக்குர்ஆன் 2 : 153
பொறுமையும், தொழுகையும் மனிதர்கள் செய்கின்ற அமல்களேயாகும். இத்திரு வசனத்தில் இவ்விரண்டைக் கொண்டும் “வஸீலா” உதவிதேடுமாறு அல்லாஹ் விசுவாசிகளைப் பணித்துள்ளான்.
பொறுமை, தொழுகை இரண்டு வகையான வணக்கங்கள் மட்டும் இத்திரு வசனத்தில் கூறப்பட்டிருந்தாலும் “இபாதத்” வணக்கம் அல்லது அமல்கள் என்ற அடிப்படையில் இவ்விரண்டும் தான் வணக்கங்கள் என்றோ அமல்கள் என்றோ சொல்லமுடியாது.
நோன்பு, ஸகாத், ஹஜ்ஜூ, திக்று, பிக்று, முறாக்கபா, முஷாஹதா போன்ற எல்லா நற்கிரியைகளும் மார்க்கத்தில் நல்லமலாக கணிக்கப்படுகின்றன. எனவே இவை அனைத்தையும் கொண்டு நாம் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும். மேலும் பொறுமையும், தொழுகையும் சிருஷ்டிகள் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ஆராய்ந்தால் சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடலாமென்பது விளங்கும்.
எனவே மேற்கூறிய திருவசனத்தில் நல்லமல்களைக் கொண்டும், சிருஷ்டிகளைக் கொண்டும் வஸீலாத் தேடுவதற்கு மறுக்கமுடியாத ஆதாரமும் இருக்கின்றது.
வஹ்ஹாபிஸத்தை நாடெங்கும் பரப்பிய நல்லவர்கள் இத்திருவசனம் தருகின்ற வெளிப்படையான அர்த்தத்தையும், அது உள்ளடக்கி நிற்கின்ற விளக்கத்தையும் உணராமல்தான் வஸீலாத் தேடுவது கூடாதென்றும், அவ்வாறு கேட்பது “ஷிர்க்” இணைவைத்தலை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.