வசீலாத் தேடலாமா?


தொடர் ----01
எழுதியவர் சங்கைக்குரிய ஞானபிதா அபுஸ்ஸைனைன் அவர்கள்.

அவ்லியாக்களிடம் வஸீலாத்தேடுதல்,உதவிதேடுதல்,நாட்ட தேட்டங்களை நிறைவேற்றித் தரக்கேட்டல் முதலியவை “ஷிர்க்” என்றும், குப்று என்றும் சிலர் கூறுகிறார்கள். 

அவர்கள் தமது விஷமத்தனமான வழிகெட்ட கொள்கையை பரப்பி மக்களை தமது வலைக்குள் எடுத்துக் கொள்ளத் தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.இவர்களின் விஷமப் பிரச்சாரத்தினால் ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களிற் பலர் வழி தவறி விட்டார்கள் 

நபிமார்களைக் கொண்டும், அவ்லியாக்களைக் கொண்டும் வஸீலாத் தேடுவதை வணக்கமெனக்கருதி கஷ்ட நஷ்டங்களின் போது “யாறஸூலல்லாஹ்” என்றும், “யாமுஹ்யித்தீன்” என்றும், “யாரிபாயி” “யாஹாஜா” என்றும் உதவி தேடி வந்தமக்கள் அவ்வாறு செய்தால் “ஷிர்க்” ஏற்பட்டு விடும் எனப்பயந்து அந்த வழக்கத்தை கைவிட்டு விட்டார்கள். பயந்து கைவிட்டது மட்டுமல்ல அது நிஜமாகவே “ஷிர்க்” கை ஏற்படுத்திவிடும் என நம்பிக்கொண்டார்கள். 
ஒருவர் வஸீலா கேட்பது ஆகுமென்று நம்பிக்கொண்டு வஸீலாக் கேட்காமல் இருப்பதற்கும் அது “ஷிர்க்” என நம்பிக்கொண்டு கேட்காமல் இருப்பதற்கும் வித்தியாசம் உண்டு. 

ஒருவன் வஸீலாக் கேட்பது ஆகுமென்று நம்பிக் கொண்டு கேட்காமலிருப்பானாயின் அவன் குற்றவாளியாக மாட்டான். ஆனால் வஸீலாக் கேட்பது “ஷிர்க்” என்று நம்பிக்கொண்டு ஒருவன் கேட்காமல் இருந்தால் அந்த நம்பிக்கையைக்கொண்டே அவன் பெரும் குற்றவாளியாகி விடுவான் 

மார்க்கத்தில் “ஷிர்க்” கான காரியம் ஒன்றை “ஷிர்க்”கில்லை. என்று நம்புவதும், “ஷிர்க்” இல்லாத காரியம் ஒன்றை “ஷிர்க்” என்று நம்புவதும் பெருங்குற்றமாகும். 

வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று சொல்பவர்கள் உலமாக்களாயிருப்பினும், ஏனையோராயிருப்பினும் அவர்கள் அனைவரும் பெரும் பாவத்திலேயே இருக்கின்றார்கள். 

எனவே, “வஸீலாத் தேடலாமா?” என்ற இத்தலைப்பில் என்னால் முடிந்தவரை ஆதாரங்கள் திரட்டி வஸீலாத் தேடலாமா என்பதை நிரூபித்து எழுதுகின்றேன். 

வஸீலாக் கேட்பது தொடர்பாக “சுன்னத் வல் ஜமாஅத்” கொள்கையுடைய இமாம்களும், அறிஞர்களும் அநேக நூல்கள் எழுதியிருக்கின்றார்கள். 

அவற்றில் நடுத்தரமான நூல்களும் உள்ளன. மிக விளக்கமான நூல்களும் உள்ளன. நான் அவற்றில் முக்கிய நூல்களிலிருந்து வஸீலாவை நிரூபித்துக் காட்டக் கூடிய பிரதான ஆதாரங்களை மட்டும் பொறுக்கியெடுத்து இங்கு எழுதுகின்றேன். 

ஒருவன் ஒரு தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது மட்டும் தான் ஆகுமேயன்றி நபிமார்கள், அவ்லியாக்கள் ஆகியோரின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதும், நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பதும் ஆகாதென்று வஹ்ஹாபிகள் கூறுகின்றார்கள். 

நான் “வஸீலாத் தேடலாமா?” என்ற இத் தலைப்பில் வஹ்ஹாபிகள் ஆகுமென்று கூறுகின்ற விஷயத்தை விட்டுவிட்டு அவர்கள் “ஷிர்க்” என்று கூறி வரும் விஷயங்களுக்கு மட்டும் விளக்கம் எழுதுகின்றேன். 

வஸீலா என்ற சொல் “வஸல” “தவஸ்ஸல” எனும் சொல்லடிகளிலிருந்து பிறந்த ஒரு சொல்லாகும். 

“அல்வஸீலா” என்றால் எதைக் கொண்டு அல்லாஹ்வின் பக்கம் நெருங்கப்படுகின்றதோ அது “வஸீலா” என்றழைக்கப்படும். 

“வஸீலா” என்ற சொல்லுக்கு “வஸாயில்” என்றும் “வஸீல்” என்றும் “வுஸூல்” என்றும் பன்மை வரும். அல்லாஹ்விடம் கேட்டல் 

அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் “என்னை அழையுங்கள் உங்களுக்கு நான் விடைதருவேன்” என்று கூறியுள்ளான். இத்திருவசனத்தின் படி ஒருவன் தமது தேவையை அல்லாஹ்விடம் கேட்டால் அவன் அதை நிறைவேற்றிவைப்பான் என்பது தெளிவாகி விட்டது. 

ஒருவன் தனது தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது தொடர்பாக யாருக்கும் எந்தப் பரச்சினையும், எந்தக் கேள்வியுமில்லை.இதை யாரும் மறுப்பதுமில்லை. 

ஒரு தேவையை கேட்பது தொடர்பாக மூன்று வகைகள் உள்ளன: 

ஒன்று - ஒருவன் தனது தேவையை அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பது உதாரணமாக “யா அல்லாஹ்! எனது நோயைச் சுகப்படுத்துவாயாக” என்பது போன்று 

இரண்டு - ஒருவன் தனது தேவையை நபிமார்கள், அவ்லியாக்கள் முதலானோரின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பது. உதாரணமாக “யா அல்லாஹ்! எனது நோயை நபிமார்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு சுகப்படுத்துவாயாக” என்பது போன்று 

மூன்று - ஒருவன் தனது தேவையை நபிமார்களிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்டல். உதாரணமாக “நபிமார்களே! அவ்லியாக்களே! எனது நோயைச்சுகப்படுத்துங்கள்” என்பது போன்று. இம் மூன்று வகையில் அதாவது அல்லாஹ்விடம் நேரடியாகக் கேட்பதில் எந்தப்பிரச்சினையுமில்லை.எத்தகைய கருத்து வேறுபாடுகளுமில்லை. 

எனினும் நபிமார்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பதிலும், அன்பியாக்களிடமும், அவ்லியாக்களிடமும் கேட்பதிலும் தான் கருத்து வேறுபாடு இருந்துவருகிறது. 

முதலில் அன்பியாக்கள், அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்பது பற்றி வந்துள்ள ஹதீஸ்களில் முக்கியமானவைகளை எழுதுகிறேன். 

நபிமொழி : 01 

ஆதிபிதா ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவர்களை சுவர்க்கத்தில் இருக்கச் செய்து அங்கு நின்ற மரமொன்றை சுட்டிக்காட்டி இந்த மரத்தை நீங்கள் நெருங்க வேண்டாமென்று பணித்திருந்தான். 

அல்லாஹ்வின் கட்டளையை வழிகெடுக்கும் ஷைத்தானின் தூண்டுதலால் மீறிய நபி ஆதம் (அலை) அவர்கள் அந்த மரத்தண்டை சென்று அதிலிருந்த பழத்தை பறித்துச்சாப்பிட்டார்கள். இதனால் அவர்கள் பாவம் செய்தவர்களாகி விட்டார்கள். 

பாவம் செய்த நபியவர்கள் பின்னர் மனம் வருந்தியவர்களாக “இறைவா! முஹம்மத் (ஸல்) அவர்களின் பொருட்டினால் எனது குற்றத்தை மன்னித்துக் கொள்வாயாக!” என்று வேண்டினார்கள். 

அதற்கு அல்லாஹ் அப்படியொருவரை நான் படைக்கவில்லையே! அவர் பற்றி உனக்கு எவ்வாறு தெரியவந்ததென்று ஆதம் நபியிடம் கேட்டான். 

அதற்கு ஆதம்நபி அவர்கள் “இறைவா! நீ என்னை உனது கையால் படைத்து எனதுயிரை என்னில் ஊதியபொழுது நான் எனது தலையை உயர்த்திப் பார்த்தேன்.” 

அப்பொழுது “அர்ஷூ” என்னும் உனது உயர்வு மிக்க சிம்மாசனத்தின் தூன்களில் “லாயிலாக இல்லல்லாஹூ முஹம்மதுர்றசூலுல்லாஹி” என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். 

உனது திருப்பெயருடன் முஹம்மத் என்ற பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. 

உனது பெயருடன் இன்னுமொருவரின் பெயரை நீ சேர்ப்பதென்றால் அவர் உனக்கு மிக விருப்பமானவராகத்தான் இருப்பார். என்பதை உணர்ந்துதான் அவரின் பொருட்டைக் கொண்டு எனது குற்றத்தை மன்னிக்குமாறு உன்னிடம் கேட்டேன் என்று கூறினார்கள். 

அதற்கு அல்லாஹ் ஆதமே! நீ உண்மை சொல்லி விட்டாய். நிச்சயமாக அவர் சிருஷ்டிகளில் எனக்கு மிக விருப்பமானவர்தான். அவரின் பொருட்டைக் கொண்டு நீ என்னிடம் கேட்டால் நிச்சயமாக நான் உன்னை மன்னித்து விடுவேன். எனக் கூறிவிட்டு முஹம்மத் இல்லையானால் உன்னைப் படைத்திருக்கவும் மாட்டேன் என்றும் கூறினான். 

ஆதாரம் : அல்ஹாகிம் 

இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் இந்த ஹதீஸை “தலாயினுன்நுபுவ்வத்” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். 

இந்த ஹதீஸை இமாம் ஹாகிம் (றஹ்) அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான ஹதீது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்கள். 

இந்த ஹதீஸில் வஸீலாவுக்கு ஆதாரம் இருப்பது கண் உள்ளவர்களுக்கு நன்றாக விளங்கும். எனினும் அதை இங்கு விரிவாக விளக்குவதற்கு முன் மேலே கூறிக்காட்டி​ய ஹதீஸில் நபி ஆதம் (அலை) அவர்கள் பாவம் செய்ததாகவும், அதற்காக நபி (ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு பாவமன்னிப்புத் தேடியதாகவும் கூறப்பட்டுள்ளது பற்றி ஒரு சில வரிகள் மட்டும் எழுதுகின்றேன். ஆதம் நபி முதல் அண்ணல் நபீ(ஸல்) அவர்கள் வரை உலகில் தோன்றிய சகல நபீமார்களும் “நுபுவ்வத்” எனும் நபித்துவம் கிடைப்பதற்கு முன்னும், அது கிடைத்த பின்னும் “மஃஸும்” பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் என்பது ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கையாயிருக்க ஆதம்(அலை) அவர்கள் பாவம் செய்தார்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கம் என்ன? என்று ஒரு கேள்வி எழும். 

இன்னும் உலகப்பிரசித்தி பெற்ற இறைஞான மேதை அஷ்ஷெய்கு அபூ மத்யன்(றழி) அவர்கள் “லவ்குந்து மகான ஆதம லஅகல்துஷ்ஷஜறத மஅ அஸ்லிஹா” (ஆதமுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த மரத்தை நான் வேருடன் சாப்பிட்டிருப்பேன்) என்று கூறியதன் விளக்கம் என்ன? என்றும் இன்னொரு கேள்வியெழும். 

இவ்விரு கேள்விகளும் விரிவான விளக்கம் கூறித் தெளிவுபடுத்த வேண்டிய கேள்விகளாயிருப்பதனால் அவற்றை இக் கட்டுரையில் விளக்காமல் இன்னுமொரு கட்டுரையில் விளைக்கிவைக்க நாடியுள்ளேன் இன்ஷா அல்லாஹ். 

மேலே கூறிய ஹதீஸில் இருந்து நபீ(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் வஸீலா கேட்பது ஆகும் என்பதும், முதன் முதலில் நபீ ஆதம் (அலை) அவர்கள்தான் நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளார்கள் என்பதும், நபீ(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடியவர் ஒரு நபீயேயன்றி சாதாரணமானவரல்ல என்பதும், ஒரு தந்தையின் பாவம் மன்னிக்கப்படுவதற்கு நபீ(ஸல்) அவர்கள்தான் பொருட்டாக காரணமாக இருந்துள்ளார்கள் என்பதும் தெளிவாகின்றது. 

ஆதம் நபீ(அலை) அவர்கள் முதல் மனிதனாகவும் நபீ(ஸல்) அவர்கள் ஆதம் நபீக்கு பல்லாயிரம் வருடங்கள் கழித்துப் பிறந்த அவர்களின் மகனாகவுமிருக்க பிந்தினவரின் பொருட்டைக் கொண்டு முந்தினவர் வஸீலாத் தேடுதல் எவ்வாறு சாத்தியமாகுமென்று ஒரு கேள்வி எழுகின்றது. 

இக் கேள்வியும் முந்தின இரு கேள்விகள் போல் விரிவான பதில் கொண்டு விளக்கவேண்டிய ஒன்றுதான் எனினும் புத்தியும் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதுகின்றேன். அல்லாஹ் நபீஆதம்(அலை) அவர்களை படைப்பதற்கு 2000ம் வருடங்களுக்கு முன் நபீ முஹம்மத்(ஸல்) அவர்களின் ஒளியைப் படைத்துவிட்டான். அவ்வொளிக்கு “நுபுவ்வத்” எனும் நபித்துவத்தையும் வழங்கினான். 

இதனால்தான் “குந்துநபிய்யன் வஆதமு பைனல்மாஇ வத்தீனி” (நபீ ஆதம் அவர்கள் படைக்கப்படுவதற்காக நீரையும் மண்ணையும் அல்லாஹ் கலந்து பிசைந்து கொண்டிருந்த சமயமே நான் நபீயாக இருக்கின்றேன்) என்று நபீ(ஸல்) அவர்கள் அருளினார்கள். 

ஆதாரம் ; துர்முதி,அஹ்மத், 
ஷர்ஹுஸ் ஷுன்னா 
அறிவிப்பு ; அபூஹுரைரா(றழி) 

நபீ ஆதம் (அலை) அவர்கள் “அபுல் ஜஸத்” சடலத்தின் தந்தை,என்றும் , நபீ(ஸல்) அவர்கள் “அபுர்றூஹ்” றூஹின்-உயிரின் தந்தை என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். இதனால்தான் தந்தைக்கு முன் பிறந்த தனயன் என்று நபீ(ஸல்) அவர்கள் சொல்லப்படுகிறார்கள். சட உலகின் தந்தையாக நபீஆதம் (அலை)அவர்களும், ஆன்ம உலகின் தந்தையாக நபீ(ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள். 

நபீஆதம்(அலை) அவர்களின் உயிருக்குத் தந்தையாக நபீ(ஸல்) அவர்கள் இருப்பது போல், நபீ(ஸல்) அவர்களின் உடலுக்குத் தந்தையாக நபீ ஆதம் (அலை) அவர்கள் விளங்குகின்றார்கள். எனவே ஆதம் நபியிலும், அஹ்மத் நபியிலும் எதார்த்தத்தில் முந்தினவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவர். இவ்விவரத்தின் படி பிந்தினவர்தான் முந்தினவரைக் கொண்டு வஸீலாத் தேடியுள்ளாரேயன்றி பிந்தினவரைக் கொண்டு முந்தினவர் உதவி தேடவில்லை. 

​ மேலே எழுதிக்காட்டிய ஹதீஸில் நபி(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது ஆகுமென்பதற்கு போதிய ஆதாரமுண்டு. “வமன் யுஷாபிஹ் அபஹீ பமா ளலம” தந்தை செய்த வேலையை மக்கள் செய்வதில் தப்பொன்றுமில்லை. 

நபிமார்களின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடலாம் என்பதற்கு இந்த அளவு தெளிவானதும்,சரியானதுமான ஒரு ஹதீஸ் இருக்க வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று கூறுபவன் அகக் கண்ணும், புறக்கண்ணும் குருடான அந்தகனும், மூளை கலங்கிய முழுப்பைத்தியக் காரணுமேயாவான். 

வஸீலாத் தேடுதல் “ஷிர்க்” என்று கூறும் வஹ்ஹாபிகளிடம் மேலே கூறிய ஹதீஸைக் கூறிக்காட்டினால் அதை மறுப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ வழியில்லாததால் அது ளயீபான – பலங்குறைந்த ஹதீஸ் என்று சொல்லிவிடுகின்றார்கள். 

மேலும் இந்த ஹதீஸ் புஹாரியில் இருக்கிறதா? அல்லது முஸ்லிமில் இருக்கிறதா? சரியான ஆறு ஹதீதுக் கிரந்தங்களில் இருக்கிறதா? என்றும் கேட்கின்றார்கள். 

இவர்கள் கேட்கும் தோரணையைப் பார்த்தால் ஏதோ ஆதாரம் காட்டி விட்டால் வஹ்ஹாபிஸத்தை விட்டுவிட்டு “சுன்னத்வல் ஜமாஅத்” அகீதாக் கொள்​கையை உடனே ஏற்றுக் கொள்வார்கள் போல் தோன்றும் நாம் காட்டி விட்டாலோ “இது ளயீபானது” பலங்குறைந்தது என்று மீண்டும் தமது பிடிவாதப்போக்கையும், மனமுரண்டையமே ​வெளிப்படுத்தி மறுப்பார்கள். 

இந்த பலமிக்க ஹதீஸை பலங்குறைந்தது-ளயீபானது என்று கூறும் வஹ்ஹாபிகளிடம் அவ்வாறு நீங்கள் சொல்ல என்ன ஆதாரம்? யாராவது முன்னோர்கள் அவ்வாறு எழுதியுள்ளாரகளா? என்று நாம் திருப்பிக்கேட்டால் விழியை பிதுக்கி மௌனிகளாகின்றனரேயன்றி முறையான பதில் கூறுகிறார்கள் இல்லை. 

இதற்குக்காரணம் மேற்குறித்த ஹதீஸ் பலங்குறைந்தது என தட்டிக்கழிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லாதிருப்பதேயாகும். 

ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது அந்த ஹதீஸ் ளயீபானது என்று சொல்லியிருக்கவேண்டும். அல்லது அது ளயீபானதா இல்லையா? என்பதை ஆராய்ந்தறியக் கூடியவர் அத்தகைய ஆற்றலுடையவர் அது ளயீபானது என்று கூறவேண்டும். இவ்விரு வழிகளில் ஒன்றின் மூலம் தான் ளயீபான ஹதீஸை அறிந்து கொள்ளலாம். 

ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது அந்த ஹதீது ளயீபானது என்று கூறியதற்கு ஆதாரமுமில்லை. இன்று வாழ்பவர்களில் ளயீபான ஹதீஸை கண்டுபிடிக்குமளவுக்கு அறிவாற்றல் உள்ளவர்களும் யாருமில்லை. 

ஒரு ஹதீது ஸஹீஹானதா? பலங்கூடியதா? ளயீபானதா? பலங்குறைந்ததா? என்பதை ஆராய்ந்தறியக்கூடிய ஆற்றல் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீதுக்கலை விற்பன்னர்களுக்கு மட்டும் தான் இருந்தது. 

ஒரு ஹதீது ளயீபானதா இல்லையா? என்பதைக் கண்டுபிடித்தல் இலேசான கருமமில்லை. அதற்குப் பல கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக ஹதீதுக் கலையில் விஷேட திறமை பெற்றிருக்க வேண்டும். 

விஷயம் இவ்வாறிருக்க அறபுக்கல்லூரியில் ஆறேழு வருடங்கள் குறிப்பிட்ட பாடத்திட்டத்தின் கீழ் ஒரு சில கிதாபுகளை மட்டும் ஓதிவிட்டு, ளயீபான- ஸஹீஹான ஹதீது கண்டுபிடிக்க முற்படுவது கண் தெரியாதவன் காரோட்ட முற்படுவது போன்ற முட்டாள் தனமாகும். இதனால் தானும் விபத்துக்குள்ளாகி பிறரும் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதை இவர்கள் உணரவேண்டும். 

எனவே இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீதுக் கலையில் பாண்டித்தியம் பெற்றவர்கள் இன்று உலகில் எக் கோணத்திலும் இல்லாதிருப்பதால் ஒரு ஹதீது ளயீபானதா? ஸஹீஹனதா? என்று ஆராய்ந்தறியக் கூடிய யாருமே இல்லை. 

ஹதீதுக்கலை மேதைகளில் யாராவது இன்ன ஹதீது ளயீபானதென்றும், இன்னஹதீது ஸஹீஹானது என்றும் சொல்லியிருந்தால அன்றி வே​றெந்த வகையிலும் அவற்றை கண்டுபிடிக்க முடியாது. 

நான் மேலே கூறிக்காட்டிய இமாம் பைஹகீ, இமாம் ஹாகிம் (றஹ்) ஆகிய ஹதீதுக்கலை மேதைகள் எடுத்தாண்டு பேசி வந்த ஹதீஸை தகுதி வாய்ந்த எந்தவொரு “முஹத்திது” ஹதீதுக் கலை மேதையும் ளயீபென்று- பலங்குறைந்தது என்று சொல்லாமல் இருக்கும் போது நாலு கிதாபை ஓதிவிட்டும், நாலு தமிழ்ப் புத்தகங்களை வாசித்து விட்டும் இது ளயீபானது இது ஸஹீஹானது என்று நபி மொழியில் தன்னிச்சையாக தீர்ப்புக் கூறும் வஹ்ஹாபிகள் அல்லாஹ்வைப் பயந்து அவனது தண்டனைக்கும் அஞ்சிக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு ஸஹீஹான ஹதீஸை ளயீபானதென்று சொல்வது பெரிய குற்றமாகும். 

மேலே கூறிய ஹதீது ளயீபானதென்று வஹ்ஹாபிகள் கூறுவதற்கு அவர்களின் ஒரேஒரு ஆதாரம் என்ன தெரியுமா? அந்த ஹதீது பிரசித்தி பெற்ற ஆறு ஹதீதுக்கிரந்தங்களில் இடம் பெறாமலிருப்பதாகும். 

புஹாரி, முஸ்லிம், அபூதாவுத், துர்முதி, இப்னுமாஜா,நஸயீ போன்ற ஆறு ஹதீஸ் கிரந்தங்களிளும் இடம் பெற்றிருப்பவை மட்டும் தான் சரியான ஹதீஸ்கள் என்றும், ஏனைய ஹதீஸ் கிரந்தங்கள் யாவும் ளயீபானவை என்றும் வஹ்ஹாபிகள் நம்புகின்றனர் போலும். 

இது அவர்களின் அறியாமையும், மூளைக் கோளாறுமேயாகும். ஏனெனில் சரியான கிரந்தங்கள் எனப்படும் பிரசித்தி பெற்ற புஹாரி, முஸ்லிம், அபூதாவுத், துர்முதி, இப்னுமாஜா,நஸயீ போன்ற கிரந்தங்களில் வராத ஸஹீஹான ஹதீதுகள் பல்லாயிரம் இருக்கின்றன. 

ரியாளுஸ்ஸாலிஹீன் அத்கார், அல்முவத்தா, அல்தர்ஹீபுவத்தர்கீப், முஸ்தத்றக், ஜாமிஉஸ்ஸகீர், பைஹகீ, தாரகுத்னீ போன்ற கிரந்தங்களில் ஸஹீஹான- சரியான ஹதீதுகள் பல்லாயிரம் இருக்கின்றன. 

இந்நூலில் வந்துள்ள பல்லாயிரம் ஹதீதுகளைக் கொண்டு புகஹாக்கள் எனும் மார்க்கச் சட்ட மேதைகள் சட்டங்கள் கூட வகுத்துள்ளார்கள். 

பிக்ஹூச்சட்டங்கள் எடுக்கப்படுகின்ற ஹதீதுகள் ஸஹீஹான- சரியானவையாக இருக்க வேண்டும் என்பது சட்ட மேதைகளின் ஏகோபித்த முடிவாகும். 

உண்மை இவ்வாறிருக்க ஆறுகிரந்தங்களில் உள்ள ஹதீதுகளை மட்டும் தான் நாங்கள் நம்புவோம். ஏனைய கிரந்தங்களில் உள்ளதை நம்பமாட்டோம் என்ற பானியில் எடுத்த எடுப்பில் புஹாரியில் இருக்கிறதா? முஸ்லிமில் இருக்கிறதா? என்று வஹ்ஹாபிகளும், வழிகெட்ட சில்லறை ஏஜன்டுகளும் கேட்பது முழு முட்டாள்தனமான கேள்விகளேயன்றி அறிவுபூர்வமான கேள்விகள் அல்ல. மேலே குறித்த ஆறு கிரந்தங்களும் சரியான ஹதீதுகளைக் கொண்டவை என்று சொல்வதனால் அவ்வாறு கிரந்தங்களிலுமுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்பதுதான் அர்த்தமேயல்லாமல் அவற்றிலல்லாத ஹதீதுகளெல்லாம் பிழையென்பதோ, பலங்குறைந்த தென்பதோ கருத்தல்ல. வஹ்ஹாபிகளின் விளக்கம் முழுவதுமே குழப்பமானதுதான். 

எனவே, மேலே கூறிய இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ள ஹதீதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் பொருட்டைக் கொண்டு அதாவது அவர்களைக் கொண்டு அல்லாஹ்விடம் வஸீலாத் தேடுவது ஆகுமென்பதும், அது நபி ஆதம் (அலை) அவர்களின் செயல் என்ற வகையில் அதைச் செய்வது நல்ல காரியம் என்பதும் தெளிவாகிவிட்டது. 

​ பொருட்டு பற்றி ஒரு குறிப்பு 

வஸீலாத்தேடும் பொழுது “நபிமார்களின் பொருட்டைக் கொண்டு அவ்லியாக்களின் பொருட்டைக் கொண்டு” என்று நாம் கேட்கிறோம்.எனவே “பொருட்டு” என்றால் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். 

பொருட்டு என்பதற்கு அறபு மொழியில் “ஜாஹ்” என்றும் “ஹக்” என்றும் சொல்லப்படும். உதாரணமாக “இஷ்பி மறளீ பிஹக்கி நபிய்யிக” (உனது நபியின் பொருட்டால் எனது நோயைச் சுகப்படுத்து என்பது போன்று) 

சுருங்கச் சொன்னால் அவர்களின் “றுத்பத்” எனும் பதவி கொண்டும், “மன்ஸிலத்” எனும் அந்தஸ்து கொண்டும், எனது நோயைச் சுகப்படுத்திவிடு என்பதாகும். இமாம் ஹாகிம் அவர்கள் அறிவித்துள்ள மேற்கூறிய நபி மொழியில் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்பதற்கு ஆதாரமிருப்பதுடன் அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னாலேயே அவர்களைக் கொண்டு வஸீலாக் கேட்கப்பட்டிருக்கின்றது என்பதற்கும் ஆதாரமிருக்கிறது. 

நபிமொழி - 02 



கண்பார்வை இழந்த ஒரு சஹாபி நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் றசூலே எனக்கு கண்பார்வை கிடைப்பதற்கு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்” என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் “நீ விரும்பினால் நான் துஆ கேட்கிறேன் நீ விரும்பினால் பொறுமை செய்து கொள். அதுதான் சிறந்ததுமாகும்” என்று கூறினார்கள். 

இவ் விஷயத்தில் பொறுமை செய்ய விரும்பாத ஸஹாபி நீங்கள் அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். நாயகமே என்று சொன்னார்கள். 

நபி(ஸல்) அவர்கள் அவரை “வுளு” எனும் சுத்தம் செய்ய வைத்துப் பின்வருமாறு “துஆ” வை கற்றுக் கொடுத்தார்கள்.”அல்லாஹூம்ம இன்னீ அஸ்அலுக வஅதவஜ்ஜஹூ இலைக பிநபிய்யிக முகம்மதின் நபிய்யிர் றஹ்மதி யாமுகம்மத் இன்னீ அதவஜ்ஜஹூ இலாறப்பீ பீகளாயி ஹாஜதீ லிதுக்லாலீ அல்லாஹூம்ம ஷப்பி உஹூபிய்ய “ 

“இறைவா! நான் உன்னிடம் கேட்கிறேன் “றஹ்மத்” அருளுடைய நபியான உனது நபி முகம்மதைக் கொண்டு உன் பக்கம் முன்னோக்குகின்றேன். முகம்மதே! எனது தேவை எனக்கு நிறைவேற்றப்படுவதற்காக எனது இறைவனளவில் உங்களைக் கொண்டு முன்னோக்குகின்றேன். இறைவா! எனக்கு அவர்களைச் சிபாரிசு செய்யக்கூடியவர்களாக ஆக்கிவிடு” 

ஆதாரம் : நஸயீ, துர்முதீ தபறானீ, பைஹகீ 
அறிவிப்பு : உத்மான் பின் ஹூனைப் (றழி) 

இந்த ஹதீஸை இமாம் பைஹகீ (றஹ்) அவர்கள் சரியெனக் கூறிவிட்டு “பகாம வகத் அப்ஸற” அந்த ஸஹாபி கண்ணொளி பெற்று எழுந்து சென்றார் என்றும் எழுதியுள்ளார்கள். 

இன்னுமிந்த ஹதீஸை இமாம் புஹாரி அவர்கள் தங்களின் “தாரீக்” எனும் நூலிலும் இப்னுமாஜா இமாம் ஹாகிம் போன்ற ஹதீஸ்கலை விற்பன்னர்கள் “முஸ்தத்றக்” எனும் நூலிலும் கூறியுள்ளார்கள். இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி(றழி) அவர்கள் தங்களின் “அல்ஜாமிஉல்கபீர்” “அல்ஜாமிஉஸ்ஸகீர்” எனும் நூல்களிலும் கூறியுள்ளார்கள். 

இந்த ஹதீதில் நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலா தேடப்பட்டிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது. 

ஹதீதில் வந்துள்ள “பினபிய்யிக” (உனது நபியைக் கொண்டு) என்ற சொல்லும், “வஅதவஜ்ஜஹூபிக” (உங்களைக் கொண்டு முன்னோக்குகின்றேன்) என்ற சொல்லும் வஸீலாவின் விவகாரத்தை விளக்கமாக கூறுகின்றன. எனவே, மேலே குறித்த ஹதீதில் இருந்து நபி(ஸல்) அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது ஆகுமென்பதும், நபி(ஸல்) அவர்கள் ஹயாத்துடன் உயிருடனிருந்த நேரத்திலேயே அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடப்பட்டுள்ளதென்பதும், அவர்களைக் கொண்டு வஸீலாத்தேடுமாறு சொன்னது நபி(ஸல்) அவர்களேதான் என்பதும் தெளிவாகி விட்டது. 

ஹதீதின் புதையல் 

நபி(ஸல்) அவர்களிடம் தனது கண்ணொளிக்காக ‘துஆ’ கேளுங்கள் என்று ஸஹாபி கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள் அவருக்காக “துஆ” க் கேட்காமல் நீ விரும்பினால் துஆ கேட்கிறேன். நீவிரும்பினால் பொறுமை செய். அதுதான் சிறந்தது. என கூறியதில் ஆழமான பல ஆன்மீக மெய்ஞ்ஞானக் கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலதை மட்டும் இங்கு எழுதுகின்றேன். 

மனிதரில் பலரகம் 

ஒரு மனிதனுக்கு நோய் வந்துவிட்டால் அந்த நோயை அல்லாஹ்வினால் அவனுக்கு வழங்கப்பட்ட ஒரு சன்மானமெனக் கருதி அந்நோயை மருந்து மாத்திரையைக் கொண்டு சுகப்படுத்துவதற்கு வழி செய்யாமல் தனக்குக் கிடைத்த அச்சன்மானத்தை முழுமனதுடன் ஏற்று அல்லாஹ்வின் செயலைப் பொருந்திக் கொண்டு வாழ்பவர்கள் ஒரு கூட்டத்தினர். 

இக் கூட்டத்தினர் “முதவக்கிலீன்”” அல்லாஹ்வில் “”தவக்குல்” வைத்தவர்களென்று அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் நோய்க்கு மருந்து செய்யாமல் அதைப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன் நோய் தந்தவன் விரும்பினால் சுகப்படுத்துவான் என்ற நம்பிக்கையில் இருந்து விடுவார்கள். எந்தவொரு தேவையேற்பட்டாலும் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்காக துஆ கேட்கமாட்டார்கள். “துஆ” கேட்பது அல்லாஹ்வின் செயலை ஆட்சேபித்தல் போன்றதென அவர்கள் கருதுவார்கள். இவர்கள் தான் “முதவக்கிலீன்” என்றழைக்கப்படுகின்றார்கள். 

இவர்களல்லாதவர்கள் நோய் வந்தால் பொறுத்திருக்க மாட்டார்கள். உடனே அதற்கான பரிகாரம் செய்வார்கள். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவார்கள். எந்த தேவைக்கும் அல்லாஹ்விடம் “துஆ” கேட்பார்கள். 

இவ்வாறு உலகில் இரு பிரிவினர் இருக்கின்றார்கள். முந்தினவர்கள் “முதவக்கிலீன்” அல்லாஹ்விடம் தமது சகல காரியங்களையும் ஒப்படைத்துவிட்டு அவனுடைய வணக்க வழிபாட்டில் நிலைத்திருப்பார்கள். 

இவர்கள் தமது வாழ்க்கைச் செலவுக்காகவும், உணவு, உடை போன்றவற்றுக்காகவும், உழைக்கமாட்டார்கள். அல்லாஹ் இவர்களின் காலடிக்கு அனுப்பி வைப்பதை மட்டும் ஏற்றுக்கொள்வார்கள். இவர்கள் “முதவக்’கிலீன்” என்றழைக்கப்படுவது போல் “முகர்றபீன்” அல்லாஹ்வை நெருங்கியவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். இவர்கள் அவ்லியாக்கலில் ஒரு பிரிவினர். நன்றி ஸம்ஸ்