வசீலாத் தேடலாமா?

தொடர் 06... 

நபிமொழி . 08 

உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர்கள் ஒரு பிரயாணம் செய்தார்கள். அப்பிரயாணத்தின் போது இருட்டாகிவிட்டது. இரவைக் கழிப்பதற்காக வழியில் இருந்த மலைக்குகையொன்றில் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே போனபின் மலையுச்சியிலிருந்து விழுந்த கல் ஒன்று அவர்கள் தங்கியிருந்த குகையின் வாயலை அடைந்து விட்டது.

அக்கல் பெரிய கல்லாக இருந்த படியால் அவர்களால் அதை அகற்ற முடியாமல் போயிற்று. அதை அகற்றாமல் அவர்கள் வெளியேற வேறுவழியும் இல்லாமலிருந்தது.
குகைக்குள் மாட்டிக் கொண்ட மூவரும் சற்று நேரம் செய்வதறியாது யோசித்துக் கொண்டும், கவலையடைந்து கொண்டுமிருந்தனர்.

அவர்களிலொருவர் மற்ற இருவரிடம் நாம் இதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறது. இதற்து என்ன வழிசெய்யலாமென்று கேட்டார். அதற்கு அவர்களில் ஒருவர் நாம் இதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. எனினும் நாம் நமது வாழ்க்கையில் செய்த அமல்களில் தூய்மையான அமல்களும் இருக்கும் அந்த வணக்கத்தைக் கொண்டு நாம் இப்பொழுது வஸீலாத் தேடிப்பார்ப்போம் என்று ஆலோசனை சொன்னார்.

அவர் கூறிய ஆலோசனையை மற்ற இருவரும் சரி கண்டதால் அவ்வாறே செய்வதென்று முடிவு செய்தார்கள்.

மூவரில் ஒருவர் “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த நோயால் பீடிக்கப்பட்ட பெற்றோர் இருந்தார்கள். நான் காலையில் காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். வரும் பொழுது எனது பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் இராச்சாப்பாட்டுக்காக பால் கொண்டு வருவேன். முதலில் எனது பெற்றோர்களுக்கே அதைக் கொடுப்பேன். அவர்கள் அருந்தி மிஞ்சுகின்ற பாலையே எனது மனைவி மக்களுக்கு கொடுப்பேன். பெற்றோரின் பசிதீராமல் எனது மனைவி மக்களுக்கு நான் கொடுத்ததேயில்லை.

ஒரு நாள் எனது தேவை காரணமாக காட்டில் நான் தாமதமாகியதால் குறித்த நேரத்திற்கு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிதுநேரம் கழித்து நான் வந்தபொழுது எனது பெற்றோர்கள் என்னை எதிர்பார்த்திருந்து விட்டு உறங்கிவிட்டார்கள். அவர்களை விழிப்பாக்கி அவர்களின் தூக்கத்தை கலைக்க விரும்பாத நான் விடியும்வரை பால் பாத்திரத்தை ஏந்தியவனாக நின்றுகொண்டிருந்தேன். எனது குழந்தைகளோ பசிக்கொடுமையினால் பால் கேட்டு எனது காலடியில் தவழ்ந்து திரிந்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்களுக்கு கொடுக்காமல் விடியும்வரை காத்திருந்து விடிந்த பிறகு எனது பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுத்தான் எனது பிள்ளைகளுக்குக்கொடுத்தேன்.

இறைவா! நான் இவ்வேலையை எனது பெற்றோர் மீது எனக்கிருந்த பாசத்தினாலும், அவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டிய காரணத்தினாலுமேயன்றி யாரிடமும் எதையும் எதிர் பார்த்து நான் அங்கணம் செய்யவில்லை.

எனவே, நான் செய்த இவ்வேலை உன்னிடத்தில் தூய்மையானதாகவும், “இக்லாஸ்” கலப்பற்றதாயுமிருந்தால் இக்கல்லினால் எங்களுக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கிவைப்பாயாக என்று வேண்டினார்.

அப்பொழுது அக்கல் சற்று நகர்ந்தது. எனினும் அதன் வழியாக வெளியேற முடியாமலிருந்தது.

இரண்டாம் நபர்“இறைவா! எனது சாச்சாவுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் எனக்கு மிக விருப்பமுள்ளவள். அவளுடன் நான் உடலுறவு கொள்ள விரும்பினேன். ஆயினும் அவள் அதற்கு இணங்கவில்லை. இவ்வாறு ஒரு வருடம் ஓடியது.

ஒரு நாள் அவள் என்னிடம் வந்த பொழுது உடலுறவுக்குச் சம்மதிக்கும் நிபந்தனையுடன் 120 தீனார் அவளுக்குக் கொடுத்தேன். அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாரான பொழுது அவள் என்னை நோக்கி நான் உனக்கு ஹறாமாக்கப்பட்டவள். என்னுடன் உடலுறவு கொள்ளாதே என்று சொன்னாள்.

உடனே நான் அவளை விட்டும் விலகிவிட்டேன். அவளிடம் கொடுத்த 120 தீனார்களையும் அவளிடம் இருந்து பெறவுமில்லை. “இறைவா! எனது இவ்வேலை உன்னிடத்தில் புனிமானதாகவும், “இக்லாஸ்” கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தினை நீக்கி வைப்பாயாக” என்று வேண்டினார்.

அந்தக்கல் மீண்டும் சற்று நகர்ந்தது. எனினும் அவ்வழியால் வெளியேறமுடியாமல் இருந்தது.

மூன்றாமவர் “இறைவா! கூலிக்கு வேலை செய்பவர்கள் எனக்குத் தேவைப்பட்டனர். பல கூலியாட்களைக் கொண்டு வேலை வாங்கிவிட்டு அவர்களுக்குரிய கூலிகளையும் கொடுத்து விட்டேன்.

எனினும் அவர்களில் ஒரு கூலியாள் தனது கூலியை வாங்காமல் என்னிடம் விட்டுச் சென்று விட்டார். நான் அதை சும்மாபோட்டு வைக்காமல் எனது மூலதனமான ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்றவற்றுடன் அதையும் சேர்த்துப் பெருக்கினேன். அவருடைய கூலி வியக்கத்தக்க அளவுக்கு பெருகிவிட்டது.

ஒரு நாள் அவர் என்னிடம் வந்து தான் விட்டுச் சென்ற கூலியை தருமாறு கேட்டார். இதோ நீகாணும் ஆடு, மாடு, ஒட்டகம், அடிமை போன்ற எல்லாமே உண்ணுடையதுதான் எடுத்துச் செல் என்றேன்.

அதற்கவர் என்னை கிண்டல் செய்யாதே என்றார். நான் கிண்டல் செய்ய வில்லை. நான் சொல்வது உண்மைதான் என்று சொன்னேன். அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அவை அனைத்தையும் எடுத்துச் சென்றார். இறைவா! என்னுடைய இந்த வேலை உன்னிடத்தில் புனிதமானதாயும் “இக்லாஸ்”கலப்பில்லாததாயுமிருந்தால் இக்கல்லினால் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கி வைப்பாயாக என்று வேண்டினார். அக்கல் முழுமையாக அகன்று மூவரும் வெளியேறினார்கள். என்று நபீ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம் :புஹாரி 
அறிவிப்பு :அப்துல்லாஹ்பின்உமர் (றழி) 

மேலே குறித்த ஹதீதின் மூலம் நல்லமல்களைக் கொண்டு வஸீலாத் தேடலாமென்பது தெளிவாகிவிட்டது. நல்லமல்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல் ஆகுமென்றால் அந்நல்லமல்கள் உருவாகும் நபர்களைக் கொண்டு வஸீலாத் தேடுதலும் தாராளமாக ஆகும்.

அறபு மொழியில் நல்லமல்களுக்கு “அஃமாலேஸாலிஹா”என்றும், அவ்வமல்கள் உருவாகும் நபர்களுக்கு “தவாதே பாளிலா”என்றும் சொல்லப்படும். மேலே குறித்த ஹதீதின் படி அமல்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல் ஆகுமென்பது தெளிவாகும்.

இதுவரை “அஃமால்”வணக்கங்களைக் கொண்டு வஸீலாத் தேடுவது பற்றிய ஆதாரங்களையும், விபரங்களையும் கண்டோம். இனி நபிமாரிடமும், அவ்லியாக்களிடமும் நேரடியாகக் கேட்பது பற்றி ஆராய்ந்து பார்ப்போம்.

நேரில் கேட்டல் 

ஒரு நபியின் அல்லது ஒரு வலீயின் கப்றடிக்குச் சென்று அந்த நபீயின் அல்லது வலீயின் பொருட்டைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்காமல் அந்த நபீயிடம் அல்லது வலீயிடம் நேரடியாகக் கேட்பது பற்றி சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

இது கொள்கை விளக்கத்தை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டு ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவிருப்பதால் இஸ்லாமிய கொள்கையின் பக்கம் நாம் சற்று திரும்புவோம்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாதெனில், படைத்தல், காத்தல், வளர்த்தல், உண்டாக்குதல், அழித்தல், நன்மை செய்தல், தீமைசெய்தல், நோய் கொடுத்தல், சுகம் கொடுத்தல், கொடுத்தல், எடுத்தல், உயிராக்குதல், மரணிக்கச் செய்தல் போன்ற செயல்கள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையாகும். இவற்றில் ஒன்று கூட வேறொருவருக்குச் சொந்தமானதாயிருக்க முடியாது.

நன்மையும், தீமையும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதென நம்புதல்தான் ஈமான் விசுவாசமாகும். “ஈமான்” நம்பிக்கை ஆறு பர்ழுகளில் “வல்கத்ரிகைரிஹீ வஷர்ரிஹீ மினல்லாஹி தஆலா” (நன்மையும், தீமையும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளதென நம்புதலும் ஒன்றாகும்.)

நன்மையும், தீமையும் என்றால் சகல செயல்களும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளது. என்று நம்புதல் வேண்டும். அதாவது அனைத்தும் அவனின் செயலென்று நம்புதல் அவசியமாகும். “அல்லாஹ் சகல வஸ்துவையும் படைத்தான்”(திருக்குர்ஆன் 06:101)“உங்களையும், நீங்கள் செய்யக்கூடியவைகளையும் அல்லாஹ் தான் படைத்தான்”திருக்குர்ஆன் (37:96)

மேலே குறித்த திருவசனங்களும், சகல செயல்களையும் சகல வஸ்துக்களையும் அல்லாஹ்தான் படைத்தான் என்பதை உறுதியாகக் கூறுகின்றன. சகல செயல்களும் அல்லாஹ்வுக்கு சொந்தகமானவை. அல்லாஹ்வுக்குரியவை. அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை. என நம்புகின்றபொழுது வேறுயாருக்கும் எச்செயலும் கிடையாதென்றும் நம்புதல் வேண்டும். அவ்வாறு நம்புதல் இவ்வாறான நம்பிக்கையை அவசியமாக்கிவிடும்.

ஒரு விசுவாசியின் நம்பிக்கை இவ்வாறுதான் இருக்க வேண்டும். இவ்வாறு நம்புகின்றவன் மட்டும் தான் விசுவாசியாயுமிருப்பான். இதற்கு மாறாக நம்பியவன் விசுவாசியுமில்லை. அவ்வாறு நம்புதல் விசுவாசமுமில்லை. இந்த அடிப்படையின் படி யார் எதைச் செய்தாலும் அது அல்லாஹ்வின் செயலன்றி வேறுயாருடையதுமில்லை.

வேறுயாராலும் எதுவும் செய்யவும் முடியாது. உதாரணமாக முஸம்மில் என்பவன் தொழுதானென்றால் அவனால் உருவான தொழுகை என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் முஸம்மிலுக்குரியதல்ல. அதாவது அவனுடைய செயலல்ல.

முக்தார் என்பவன் சாப்பிட்டானென்றால் அவனால் உருவான சாப்பிடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் உருவான சாப்பிடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் அவனுக்குரியதல்ல.

முனாஸ் என்பவன் திருடினானென்றால் அவனால் உருவான திருடுதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் அவனுக்குரியதல்ல. எனவே, தொழுதல், சாப்பிடுதல், திருடுதல் போன்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே மேலும் அவையனைத்தும் அவனின் செயல்களே!

இந்த விவரப்படி அதாவது செயல்களெல்லாம் அவனுடைதென்ற விவரப்படி எந்தவொரு செயலாயினும் அதைச் செய்பவன் அல்லாஹ் என்றுதான் நம்புதல் வேண்டும்.

சகல செயல்களும் அல்லாஹ்வின் செயல் என்ற முடிவின் படி அப்துல்லாஹ்வுக்கும் ஒரு செயலுமில்லை. ஆதமுக்கும் ஒரு செயலுமில்லை. ஹவ்வாவுக்கும் ஒரு செயலுமில்லை. ஹாஜராவுக்கும் ஒரு செயலும் கிடையாது. எனினும், அல்லாஹ்வின் செயல் எவர் மூலம் அல்லது எந்த வஸ்து மூலம் வெளியாகின்றதோ அச் செயலை அவர் செய்ததாகவும், அவ்வஸ்த்து செய்ததாகவும் உலக நடைமுறையில் சொல்லப்பட்டுவருகிறது.

​தொழுகை என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற ஒரு செயலாக இருந்தாலும் கூட அச் செயல் அவன் மூலம் அவன் வழியாக வெளியாவதைக் கொண்டு மட்டும் தான் அவன் தொழுதான் என்று கூறப்படுகின்றதேயல்லாமல் அச் செயலுக்கு உரியவன் இணைதுனையில்லாத அல்லாஹ் ஒருவனேயாவான் .தொழுதவனல்ல.

இதே போல் சாப்பிடுதல் என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற ஒரு செயலாக இருந்தாலும் கூட அச் செயல் அவன் மூலம் வெளியாவதைக் கொண்டு மட்டும் தான் அவன் சாப்பிட்டான் எனகூறப்படுகின்றதேயல்லாமல் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவனேயாவான். சாப்பிட்டவனல்ல.

இன்னுமிதேபோல் திருடுதல் என்பது ஒரு மனிதனால் நடைபெருகின்ற செயலாக இருந்தாலும் அச்செயல் அவன் மூலம் அவன் வழியாக வெளியாவதை கொண்டு மட்டும் தான் அவன் திருடினான் என்று கூறப்படுகிறதேயல்லாமல் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவனேயாவான். திருடினவனல்ல.

கீழே நான் எழுதப் போகின்ற விஷயத்தை விளங்கிக் கொண்டால் நான் இதுவரை கூறிவந்த விபரங்களை மிக எளிதாகப்புரிந்து கொள்ள முடியும். ஒரு செயலுக்குரியவன் ஒருவன் இருக்க அச் செயலை அதற்குரியவனின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது வெளியாவதற்குப் பாத்திரமாக வெளியாக இருந்தவன் பக்கம் சேர்த்துச் சொல்லுதல் உலக வழக்கமேயன்றி யதார்த்தமில்லை.

ஹகீகத் அக்லியும், மஜாஸ் அக்லியும் 

ஹகீகத் அக்லீ என்றும், மஜாஸ் அக்லீ என்றும் இருவகையுண்டு. இவையிரண்டும் “இல்முல்மஆனீ” என்று சொல்லப்படுகின்ற யாப்பிலக்கணக்கலையில்தான் பேசப்பட்டுள்ளது.

இக் கலை படிக்ககாதவர்களுக்கு இப்பொழுது நான் சொல்லப் போகின்ற விஷயம் சுத்த சூனியமாகவே இருக்கும். அறிவும், சிந்தனையும் உள்ளவர்கள் மட்டுமாவது விளக்கிக் கொள்ள வேண்டும். என்பதற்காக இங்கு அதன் விபரங்களை சுருக்கமாக எழுதுகின்றேன்.

“ஹகீகத் அக்லி” என்றால் ஒருசெயலை அச் செயல் வெளியான பாத்திரத்தின் பக்கம் சேர்த்துக் கொள்ளாமல் அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துக்சொல்வதாகும்.

உதாரணமாக –“ஷபல்லாஹுல் மறள” (அல்லாஹ் நோயை சுகப்படுத்தி விட்டான்) என்பது போன்று இது தான் ஹகீகத் அக்லி என்பதற்கு உதாரணமாகும்.

சுகப்படுத்துதல் என்பதுஒருசெயல் இச்செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். இச்செயல்வேறு யாருக்குமில்லை.மேலே கூறிய உதாரணத்தில் சுகப்படுத்துதல் என்றசெலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்து சொல்லப்பட்டிருக்கிறதேயல்லாமல் அச்செ​யல் வெளியாவதற்கு பாத்திரமாக அல்லது வழியாக இருந்த மருந்தின் பக்கம் சேர்த்துச்சொல்லப்படவில்லை. இதுதான் “ஹகீகத் அக்லி”என்றுசொல்லப்படுகிறது.

“மஜாஸ் அக்லி” என்றால் ஒருசெயலை அச் செயலுக்குரியவன் பக்கம்சேர்க்காமல் அச்செ​யல் வெளியாவதற்கு பாத்திரமாக அல்லது வழியாக இருந்தவன் பக்கம் சேர்த்துக் சேர்த்துக்சொல்வதாகும்.

உதாரணமாக –“ஷபல்லாஹுல் மறள” (அல்லாஹ் நோயை சுகப்படுத்தி விட்டான்) எனும் உதாரணத்தில் “ஷபத்தவாஉல் மறள” (மருந்து நோயை சுகப்படுத்தி விட்டது) என்றுசொல்வதுபோன்று.

சுகப்படுத்துதல் என்பது ஒருசெயல் அதற்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். இச்செயலை அல்லாஹ்வின் பக்கம் சேர்க்காமல் சுகப்படுத்துதல் எனும் அல்லாஹ்வின் செயல் வெளியாவதற்கு வழியாக -பாத்திரமாக இருந்த மருந்தின் பக்கம்சேர்த்துக் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் “மஜாஸ் அக்லி”என்றுசொல்லப்படும்