வஸீலாத் தேடலாமா? --
தொடர் 07
இன்னுமோர் உதாரணத்தில் மூலம் இவ்விரு வகையையும் தெளிவு படுத்துகின்றேன். இவ்விரு வகையையும் விளங்கிக் கொள்வதற்கு மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணம் போதுமானதாயிருந்தாலும் “பிதிக்ரில் அம்திலதி தத்தலிஹுல் அஷ்யா” (உதாரணங்கள் கூறுவது கொண்டு விஷயங்கள் தெளிவாகும்) என்ற முதுமொழிக்கமைய இங்கு இன்னுமோர் உதாரணத்தை எழுதுகின்றேன்.
“அன்பதல்லாஹுல் பக்ல”அல்லாஹ் கீரையை முளைக்கச் செய்தான்) என்பது போன்று. முளைக்கச் செய்தல் என்பது ஒரு செயல் இச்செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான். வேறுயாருக்கும் முளைக்கச் செய்ய முடியாது.
மேலே எழுதிக் காட்டிய உதாரணத்தில் முளைக்கச் செய்தல் என்னும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இது “ஹகீகத் அக்லி” என்பதற்கு நான் கூறும் மற்றுமோர் உதாரணமாகும். இதே உதாரணத்தை “அன்பதல் மதறுதல் பக்ல” (மழை கீரையை முளைக்கச் செய்தது) என்று முளைக்கச் செய்தல் என்னும் செயலை அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்காமல் அதற்குக் காரணமாக, வழியாக இருந்த மழையின் பக்கம் சேர்த்துச் சொல்லலாம். இவ்வாறு சொல்லுதல் “மஜாஸ் அக்லி” எனப்படும்.
ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் அல்லது அச்செயலுக்குரிய வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்லும் “ஹகீகத் அக்லி” நடைமுறையும் ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அச்செயலுக்கு வழியாக இருந்தவன் பக்கம் அல்லது வழியாக இருந்த வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்லும் “மஜாஸ் அக்லி” நடைமுறையும் திருக்குர்ஆனிலும் கையாளப்பட்டுள்ளன.
திருக்குர்னில் ஹகீகத் – மஜாஸ்
அல்லாஹ் திருக்குர்ஆனின் அநேக இடங்களில் மேலே சொல்லப்பட்ட இரண்டு முறைப்படியும் கூறியுள்ளான். “வஇதா மரிள்த்து பஹுவ யஷ்பீன்” (நான் நோயுற்றால் அவன் சுகப்படுத்துவான்)
திருக்குர்ஆன் – 26.80
இத்திருவசனத்தில் இரண்டு அம்சங்களுள்ளன.ஒன்று – நோய் கொடுத்தல்
இரண்டு – சுகம் கொடுத்தல்
இது நபீ இப்றாஹீம் (அலை) அவர்களின் பேச்சு, அவர்களுக்கு நோய் கொடுப்பதும். சுகம் கொடுப்பதும் இரண்டு செயல்களாகும். இவ்விரு செயல்களுக்கும் உரியவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை. எவருக்கும் நோய் கொடுக்கவும் முடியாது, சுகம் கொடுக்கவும் முடியாது.
எனினும் மேலே குறித்த ஒரு வசனம் நோய் கொடுத்தல் என்ற செயல் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களின் பக்கமும், அல்லாஹ்வின் பக்கமும் சேர்க்கப்பட்டு அருளப்பட்டுள்ளது.
“வஇதா மரிள்த்து” என்பது நான் நோயுற்றால் என்ற அர்த்தமும் “பஹுவ யஷ்பீன்” என்பது அவன் சுகம் தருவான் என்ற அர்த்தமும் உள்ளதாகும். “வஇதா மரிள்த்து” நான் நோயுற்றால் என்பது நோய் கொடுத்தல் என்ற செயல் இப்றாஹீம் (அலை) அவர்களின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதுதான் “மஜாஸ் அக்லீ” எனப்படும்.
“வஇதா மரிள்த்து” என்ற வசனம் “வஇதா அம்ரளன” (அவன் என்னை நோயாளியாக்கினால்) என்று வந்திருந்தால் இது “ஹகீகத் அக்லீ” ஆகிவிடும். இதிலிருந்து திருக்குர்ஆனில் “மஜாஸ் அக்லீ” கையாளப்பட்டிருப்பது தெளிவாகின்றது.
“பஹுவ யஷ்பீன்” அவன் சுகப்படுத்துவான் என்பது சுகப்படுத்துதல் என்ற செயல் அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.இது “ஹகீகத் அக்லீ” எனப்படும்.
“பஹுவ யஷ்பீன்” என்ற வசனம் “பத்தவாஉ யஷ்பீன்” (மருந்து என்னை சுகப்படுத்தும்) என வந்திருந்தால் இது “மஜாஸ் அக்லீ” ஆகிவிடும். எனவே, திருக்குர்ஆனில் ஒரு வசனத்திலேயே மேலே சொல்லப்பட்ட இரண்டு முறைகளும் கையாளப்பட்டிருப்பது தெளிவாக விளங்குகிறது.
அல்லாஹு யதவப்பல் அன்பஸஹீன மவ்திஹா (உயிரினம் ஆண்மக்கள் மரணிக்கும் பொழுது அல்லாஹ்தான் அவற்றை மரணிக்கச் செய்கின்றான் மரணிக்கச் செய்தல் எனும் செயல் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் வேருயாருக்குமில்லை. வேருயாரையும் மரணிக்கச் செய்யவும் முடியாது.
எனவே, மரணிக்கச் செய்தல் எனும் செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் அச்செயலைச் சேர்த்து அல்லாஹ் மரணிக்கச் செய்வான் என்று அருளப்பட்டுள்ளது .இதுதான் ஹகீகத் அக்லீ எனப்படும்.
குல்யதவப்பாக்கும் மலகுல்மௌதில்லதீ வுக்கில பிகும் (உங்களைக் கொண்டு சாட்டப்பட்ட மலக் – அமரர் உங்களை மரணிக்கச் செய்வான். இத்திருவசனத்தில் மேலே சொன்ன வசனத்தில் சொல்லப்பட்டதற்கு மாறாக மரணிக்கச் செய்தல் எனும் செயல் அச்செயலுக்குப் பாத்திரமாக வழியாக இருந்த அமரரின் பக்கம் சேர்த்து மலக்குல்மௌத்து உங்களை மரணிக்கச் செய்வார் என்று அருளப்பட்டுள்ளது இதுதான் மஜாஸ் அக்லீ எனப்படும்.
இன்னும் இவை போன்ற வசனங்கள் மஜாஸ்அக்லீ முறைப்படி அருளப்பட்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு எழுதுகின்றேன்.
வஇதா துளியத் அலைஹிம் ஆயாதுஹு சாதாத்துஹும் ஈமான் (அவர்களிடம் அல்லாஹ்வின் திரு வசனம் ஓதப்பட்டால் அத்திருவசனங்கள் அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்)
மனிதர்களிடம் திருக்குர்ஆனின் வசனங்கள் ஓதப்படும் இடத்து, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றவன் அல்லாஹ் ஒருவன்தான் ஏனெனில் நம்பிக்கையை ஏற்படுத்தும் அதிகப்படுத்தும் வல்லமை அல்லாஹ் ஒருவனுக்கேதான் உண்டு. எனினும் மேலே குறித்த வசனத்தில் திருவசனங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்துமென்று அல்லாஹ் கூறியுள்ளான்.
நம்பிக்கையை அதிகப்படுத்தும் வல்லமை அல்லாஹ்வுக்கு உண்டேயன்றி திருவசனங்களுக்கு இல்லை. எனினும் நம்பிக்கை அதிகப்படுத்துவதற்கு திருவசனங்கள் வழியாக – காரணமாக இருப்பதனால் அவ்வழியின் பக்கம் சேர்த்து “மஜாஸ் அக்லீ” முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.
இன்னும் ஒரு வசனம் - “யவ்ம யஜ்அலுல் வில்தான ஷீபன்” (வாலிபர்களை நரையுடையவர்களாக அந்த நாள் ஆக்கும்)
திருக்குர்ஆன் – 73.17
வாலிபர்களை நரையுடையவர்களாக ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமேயுண்டு. எனினும் இத்திரு வசனத்தில் வாலிபர்களை அந்த நாள் தான் நரையுடையவராக்கின்றது. என்று கூறியுள்ளான்.
வாலிபர்களை நரையுடையவர்களாக ஆக்குவதற்கு அந்நாள் வழியாக இருப்பதனால் “மஜாஸ் அக்லீ” முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலும் ஒரு திருவசனம் – “வலாயகூத வயஊக வநஸ்றா, வகத் அலல்லூ கதீறா” (யகூத், யஊக், நஸ்று எனும் விக்கிரகங்கள் அநேகரை வழிகெடுத்து விட்டன.)
திருக்குர்ஆன் – 71.23.24
நேர்வழி காட்டும் வல்லமையும், வழிகெடுக்கும் வல்லமையும் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளதாகும். எனினும் இத்திருவசனங்களின் விக்கிரகங்கள் வழிகெடுத்து விட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.
வழிகெடுப்பவன் அல்லாஹ்வாக இருந்தாலும் அந்த விக்கிரகங்கள் வழிகெடுப்பதற்கு வழியாக இருப்பதனால் அவை பக்கம் சேர்த்து “மஜாஸ் அக்லீ” எனும் முறைப்படி அல்லாஹ் கூறியுள்ளான்.
மற்றுமொரு மறைவசனம் இதோ
– “யாஹாமானுப்னிலீ ஸர்ஹன்” (ஹாமானே எனக்கு ஒரு மாளிகை கட்டு)
திருக்குர்ஆன் – 40.36
பிர்அவ்ன் என்பவன் ஹாமானை நோக்கி “எனக்கு ஒரு மாளிகை கட்டு” எனக் கூறினான். மாளிகை கட்டுவது வேலையாட்களே தவிர ஹாமான் இல்லை. எனினும் ஹாமான் என்பவர் மாளிகை கட்டுவதற்கு ஒரு வழியாக இருப்பதால் அவரின் பக்கம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
இதுவரை சொல்லிவந்த விவரங்களிலிருந்து “மஜாஸ் அக்லீ” முறைப்படி பேசுவது திருக்குர்ஆனிலும் வந்துள்ளதென்பது தெளிவாகிவிட்டது. “ஹகீகத் அக்லீயும் மஜாஸ் அக்லீ”யும் என்ற தலைப்பில் இதுவரை நான் எழுதிவந்த விவரங்களிலிருந்து ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதும், அல்லது அச்செயல் வெளியாகுவதற்கு வழியாக இருந்தவனின் பக்கம் அல்லது ஒரு வஸ்துவின் பக்கம் சேர்த்துச் சொல்வதும் ஒரு மொழியிலுள்ள வழக்கம் என்பதும் இவ்வழக்கம் அறபு மொழியிலுள்ள திருக்குர்ஆனிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதென்பதும் தெளிவாகிறது.
உலகில் நிகழ்கின்ற செயல்கள் யாவும் யதார்த்தத்தில் அல்லாஹ்வின் செயலாக இருந்தாலும் அச்செயலெல்லாம் அவன் பக்கம் சேர்த்துப்பேசப்படுவதில்லை.
ஒரு சில செயல்கள் மட்டுமே அவன் பக்கம் சேர்த்துப் பேசப்படுகின்றன. எனினும் அநேக செயல்கள் அவை வெளியாவதற்கு வழியாக இருக்கின்றவர்கள் பக்கம் அல்லது வழியாக இருக்கின்ற வஸ்துவின் பக்கம்தான் சேர்த்துப் பேசப்படுகின்றன.
முஸம்மில் தொழுதான், முபாறக் சாப்பிட்டான், முனாஸ் திருடினான் என்றுதான் சொல்லப்படுமேயல்லாமல் அல்லாஹ் தொழுதான், அல்லாஹ் சாப்பிட்டான், அல்லாஹ் திருடினான் என்று யாரும் சொல்வதில்லை.
ஆயினும், சகல செயல்களுக்கும் உரியவன் அல்லாஹ்தான் என்ற கருத்துப்படியும் “லா பாயில இல்லல்லாஹ்” (செய்பவன் அல்லாஹ் தவிர வேறுயாருமில்லை) என்ற தத்துவத்தின் படியும் எச்செயல் யாரால் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் வேயன்றி வேறுயாருமில்லை.