அண்ணல் ஹாஜா நாயகத்தின் 26 வருட மகா கந்தூரிக்கான திருக் கொடி யேற்றம்.
அஜ்மீர் அதிபதியின் 'நாளை" சங்கைப்படுத்தி இச்சிறு கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
யுத்தத்தில் ஷஹீதானவர்களை மரணித்தவர்கள் என்று நினைக்காதீர்கள். அவர்கள் உயிருடனே வாழ்கிறார்கள். உணவு கொடுக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய சிறப்பைக் கொண்டு மகிழ்வுற்றிருக்கின்றனர்.’ (திருக்குர்ஆன்)
யுத்தம் இரு வகைப்படும். ஒன்று இஸ்லாத்திற்காக வாளேந்திப் போராடுதல், மற்றது தன்னில் இருந்து ஆட்சி புரியும் கொடிய ‘நப்ஸ்’ எனும் மனவெழுச்சியுடன் போராடி வெற்றி அடைதல்.
இங்கு இரண்டாவது வகை யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களே ‘அவ்லியாக்கள்’என அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் ஒருவர்தான் அஜ்மீர் அரசர் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (றழி) அவர்களாகும்.
ஹாஜா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 537 றஜப் மாதம் 14ம் திகதி திங்கட்கிழமை ‘ஸஞ்சரி’ நகரில் பிறந்தார்கள். இவர்களின் தாயின் பெயர் பீவி மாஹ்னூர். தந்தையின் பெயர் ஹழ்றத் கியாதுத்தீன் (றழி) அவர்களாகும்.
இவர்கள் தன் தாயின் வயிற்றிலிருக்கும் போதே இரவு வேளையில் ‘திக்ர்’ செய்வார்கள். தான் பிறக்கும்போது சுஜூதில் இருந்து தனக்கும், தனது எதிர்கால முரீதுகளுக்குமாக ‘துஆ’ செய்தார்கள். சில பு கைப்படங்கள் உள்ளே......
வளர்ந்து வாலிபப் பருவம் அடைந்த ஹாஜா நாயகம் அவர்கள் ‘ஸமர்க்கந்த்’ சென்று ஹழ்ரத் ஹிஸாமுத்தீன் புஹாரி அவர்களிடம் திருக்குர்ஆனை ஓதி முடித்தார்கள். பின்னர் இறுதியில் அஷ்ஷெய்கு உஸ்மானுல் ஹாறூனீ (றழி) அவர்களிடம் வந்து ‘பைஅத்’ பெற்று ‘சிஷ்திய்யா’ தரீக்காவில் சேர்ந்தார்கள். பின்பு கஃபாவை அடைந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிய பின் நாயகம் (ஸல்) அவர்களின் புனித றவ்ழா ஷரீபை அடைந்து ‘ஸியாரத்’ செய்தார்கள்.
பின்னர் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப் படி இந்தியாவை வந்தடைந்தார்கள். இந்தியா வந்த ஹாஜா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 551 முஹர்ரம் 10ம் திகதி அஜ்மீர் வந்தடைந்து அங்கு நின்ற மரத்தின் நிழலில் இறங்கினார்கள.;
அது அரசனின் ஒட்டகைகள் தங்குமிடமாதலால் அங்கே இருக்கக்கூடாதென்று அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஹாஜா நாயகம் அவ்விடத்தை விட்டகன்று ‘அனாசாகர்’ எனும் ஏரியருகில் அமர்ந்தார்கள்.
ஹாஜா நாயகம் அவர்களைத் தடுத்த அதே இடத்தில் அரசனின் ஒட்டகைகள் வந்த போது அவற்றின் கால்களை பூமி விழுங்கிக் கொண்டது. அந்த இடத்தில் தான் ஹாஜா நாயகத்தின் புனித ‘தர்ஹா ஷரீப்’ தற்போது அமைந்துள்ளது.
ஹாஜா நாயகத்தின் அற்புதங்கள் அனந்தம். அவற்றில் ஒன்றையே இங்கே எழுதுகின்றோம்.
பல இடர்பாடுகளுக்கு மத்தியில் ஹாஜா நாயகமும், அவர்களது சீடர்களும் ‘அனாசாகர்’ என்னும் நீரோடைக்கு அருகில் தங்கியிருந்தார்கள்.
ஒரு சமயம் ஹாஜா நாயகம் அவர்கள் ‘வுளு’ செய்வதற்காக அந்த நீரோடையில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஹாஜா நாயகம் அவர்கள் தன்னிடம் இருந்த கூஜாவை குளத்தில் வைக்க குளத்து நீர் முழுவதும் கூஜாவினுள் ஏறி விட்டது.
இதனால் அக்குளம் வற்றி நிலங்களெல்லாம் வரண்டு விட்டன. ஆடு, மாடுகள் செத்து மடிந்து போயின. இதனைக் கண்ட மன்னன் பத்ஹூரா என்பவன் பெரும் தடுமாற்றம் அடைந்தான். உடனே தனது மந்திரவாதியான அஜேபால் என்பவனையழைத்து ஹாஜா நாயகம் அவர்க ளுடன் மந்திரத்தால் மோதிப்பார்த்தான்.
ஆனால் ‘விலாயத்’ என்னும் வலித்தனத்தின் முன் மந்திரம் தோல்வியடைந்தது விட்டது. இதனால் மந்திரவாதி அஜேபாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் வாழ்ந்த பல இலட்சம் மக்களும் புனித இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.
ஹாஜா நாயகம் அவர்கள் தனது 90 வயதின் பின் நபிகட்கரசரின் உத்தரவின் பேரில் இரு திருமணங்களைச் செய்தார்கள். அந்த இரு திருமணங்களிலும் 2 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் பிறந்தன. இறுதியில் இறைநேசர் ஹாஜா நாயகம் அவர்கள் ஹிஜ்ரி 633ல் தனது 96வது வயதில் இவ்வுலகை நீத்து பிர்தவ்ஸை அடைந்தார்கள். (இன்னாலில்லாஹி, வஇன்னா இலைஹி ராஜிஊன்)