தொடர் .. 01
மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP)
அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் நபீமார் றஸுல்மார்கள் பற்றி பிரகடனம் செய்தது போல் இறை நேசச் செல்வர்களான “அவ்லியாஉல்லாஹ்“ வலீமார்கள் பற்றியும் பல இடங்களில் பிரகடனம் செய்துள்ளான்.
அவர்கள் ஏனைய மனிதர் போன்றவர்களல்லர் என்றும் எதற்கும் எச்சந்தர்ப்பத்திலும் பயம் அற்றவர்கள் என்றும் கவலை இல்லாதவர்களென்றும் வர்ணித்துள்ளான்.
சுன்னத் வல் ஜமாஅத் வழிவாழும் மக்கள் அன்று முதல் இன்று வரை நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மீலாத் மௌலித் மஜ்லிஸ் தினங்களிலும் அவர்கள் பேரில் திருக்கொடிகள் ஏற்றி மகிழ்வை வெளிப்படுத்தி “பறக்கத்“பெற்று வருகின்றனர்.
யார் பெயரால் திருக்கொடி ஏற்றப்படுகின்றதோ அவர்களால் கொடி ஏற்றுபவர்களுக்கும் அந்நிகழ்வில் கலந்து கொள்வோருக்கும் நற்பயன்கள் கிடைக்கின்றன. அவர்களது முறாதுகள் ஹாஜத்துக்கள் நிறைவேறுகின்றன.
இதே போல் ஏற்றிய கொடியை இறக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வோருக்கும் நற்பலன்கள் கிடைக்கின்றன. முறாதுகள் நிறைவேறுகின்றன.
ஆனால் சிலர் இது இஸ்லாமியக் கொள்கைக்கு மாறுபட்ட செயலென்றும் இது இந்து பௌத்தர்களின் கொள்கை என்றும் இது குர்ஆனுக்கு மாறுபட்ட றஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரிக்காத ஷிர்க்கான செயலென்றும் இதில் கலந்து கொள்வது ஷிர்க்கான செயலில் கலந்து கொள்வதென்றும் சொல்லியும் போதித்தும் வருகின்றனர்.
எது உண்மை?
எனவே இச்சிறு நூலில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கொடியேற்றுவதும் அக்கொடியை தலைமை தாங்கி எடுத்துச் செல்வதும் அதை முத்தமிடுவதும் ஏற்றுவதும் இறக்குவதும் அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் ஆகுமானதா? இல்லையா? எது உண்மை என்பது பற்றி சுருக்கமாக விளக்கி வைக்க விரும்புகிறேன்.
கொடிகள் இரு வகை:
இன்று இரு வகைக் கொடிகள் ஏற்றி கண்ணியம் செய்யப்பட்டு வருகின்றன.
1) இலௌகிகக் கொடிகள்.
2) ஆன்மீகக் கொடிகள்.
இலௌகிகக் கொடிகள்.
இது பல வகைப்படும்.
01) தேசியக் கீதம் இசைத்து ஏற்றப்படும் பிறந்த தேசத்தின் தேசியக் கொடிகள்.
02) பலதரப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்றி வைக்கப்படும் கொடிகள்.
03) மாநாடுகளில் ஏற்றப்படும் கொடிகள்.
04) மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளின் நிகழ்வுகளின் போது ஏற்றப்படும் கொடிகள்.
05) பாடசாலைகளில் ஏற்றப்படும் கொடிகள்.
06) உலக நாடுகளுக்கான கொடிகள்.
07) ஐக்கிய நாடுகளுக்கான கொடிகள்
08) நிறுவனங்களுக்கான கொடிகள்.
இப்படி பார்க்கையில் இலௌகிகக் கொடிகள் எத்தனையோ ஏற்றப்படுகின்றன. அவ்வேளை அங்கு கண்ணியமும் கொடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கொடிகளும் ஏற்றப்படும் போது அக்கொடிகளுக்குரிய கலாச்சாரங்களும் கொடிகளுக்குரிய தாபனங்களின் இலட்சியங்களும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
தேசியக் கொடி:
தேசியக் கொடி ஏற்றி வைக்கப்படும் போது தேசியக் கீதம் இசைக்கப்படுகின்றது. அனைவரும் எழுந்து நின்று மௌனம் சாதித்து கண்ணியம் செய்கின்றனர்.
அதிசயம் ஆனால் உண்மை:
அதிசயம் என்னவெனில் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவாகவும் அவ்லியாஉகளின் நினைவாகவும் ஏற்றப்படும் திருக்கொடிகளை எதிர்ப்பவர்களும் அவற்றை “ஷிர்க்“ என்று சொல்வோரும் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளை எழுந்து மரியாதை செய்யத் தவறுவதில்லை.
அதை அவர்கள் எதற்காக செய்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. பயத்தினாலோ அல்லது அதிகாரிகள் தம்மை மதிக்கமாட்டார்கள் என்பதினால் செய்கிறார்களோ தெரியாது. ஆனால் அவர்களின் கொள்கையின்படி அதுவும் ஒரு ஷிர்க்கான செயலாகும். அரச அதிகாரிகள் பலர் சேர்ந்து கொடியேற்றும் போது தாம் எழுந்து கண்ணியம் செய்யாதிருந்தால் தன்னை அரச துரோகி என்று நினைத்து தனது தொழில் பறந்து விடும் என்ற துன்யாவின் அச்சத்தினாலோ தெரியாது.
இவர்களிடம் இறைநேசர்களின் கொடியேற்று நிகழ்வை “ஷிர்க்“ என்று சொல்லி அதில் கலந்து கொள்ளாத நீங்கள் “தேசியக் கொடி விளையாட்டுப் போட்டிக்குரிய கொடிகள் ஏற்றப்படும் போது கண்ணியமளித்து எழுந்து நின்றீர்களே..... அதன் காரணம் என்ன வென்று கேட்டால் அது வேறு இது வேறு என்று சொல்லித்தப்பி விடுகின்றனர்.
இதே போல் கிரிக்கட் அரங்குகளில் ஏற்றப்படும் கொடிகளும் அந்தத்தேச மக்களின் நாட்டுப் பற்றையும் ஒற்றுமை வெற்றி தோல்வியில் சகிப்புத்தன்மை தலைமைத்துவத்திற்கு கீழ் பணிதல் போன்ற அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கி்ன்றன.
இவ்வாறு தேசியக் கொடி மற்றும் ஏனைய கொடிகள் ஏற்றப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேச பக்தர்களின் உயர் பண்பாகும். அவற்றுக்கு அவமரியாதை செய்வது வன்பாகும்.
இவ்வாறு இலௌகிகக் கொடிகளுக்கு நம்சமூகம் கொடுக்கும் கௌரவம் ஆன்மீக ரீதியில் ஏற்றப்படும் கொடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது மட்டுமன்றி அதை ஷிர்க் என்றும் இந்து பௌத்தமத செயற்பாடென்றும் நகைப்பதும் கீழ்மைப்படுத்துவதும் சன்மார்க்க விடயங்களில் அவர்களது அறியாமையையும் கொடியின் மகத்துவத்தைப் புரியாமையுமேயாகும்.
தொடரும்..