சங்கைக்குரிய ஷெய்குனா கலாநிதி மௌலவீ
அல்ஹாஜ் A. அப்துர்றஊப்(மிஸ்பாஹீ) அவர்கள்

சுருக்கம்
“தல்கீன்” ஓதுவதற்கு பலம் வாய்ந்த நபீமொழிகளில் ஆதாரம் இல்லாவிட்டாலும் “ழஈப்” பலம் குறைந்த நபீமொழிகளில் ஆதாரமிருப்பதால் பலம் குறைந்த நபிமொழிகள் கொண்டு செயல்படலாம் என்ற விளக்கத்தின் படி“தல்கீன்”ஓதலாம் என்பது தெளிவாகிவிட்டது. “தல்கீன்” தொடர்பாக வந்துள்ள பலம் குறைந்த நபீ மொழிகள் பின்னால் வரும்.
இரண்டாவது விடயம்
“பித்அத்” எல்லாம் வழிகேடாகுமா? இல்லையா?
பித்அத் என்ற சொல்லுக்கு நூதன அனுஷ்டானம் என்ற பொருள் சொல்லிக் கொண்டாலும் இதன் சரியான விபரம் என்னவெனில் நபீ(ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத, அவர்களின் மறைவுக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயல் “பித்அத்” என்று சொல்லப்படும். ஒரு சமயம் நபீ ஸல் அவர்கள்
كلّ محدثة بدعة وكلّ بدعة ضلالة وكلّ ضلالة في النّار
புதிதாக ஏற்படுத்தப்பட்டவையெல்லாம் “பித்அத்”. “பித்அத்”எல்லாம் வழிகேடு. வழிகேடு எல்லாம் நரகத்தில். என்று சொன்னார்கள். இது பலம் வாய்ந்த நபீ மொழி என்பதில் ஐயமில்லை. இந்த நபீ மொழியின் படி அவர்களின் காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட எல்லாமே வழிகேடாயும், நரகத்திற்கான செயலாயும் ஆகிவிடும்.
இவ் அடிப்டையில் மௌலித் ஓதுதல், கத்ம், பாதிஹஹ் ஓதுதல், வஸீலா-உதவி தேடுதல், மத்ஹபுகளை பின்பற்றுதல், தரீகஹ்களை பின்பற்றுதல், கொடி ஏற்றுதல், கந்தூரி கொடுத்தல், புர்தஹ் ஓதுதல், அவ்லியாஉகளின் தர்ஹாக்களுக்குச் செல்லுதல், தல்கீன் ஓதுதல் போன்றவை யாவும் வழிகேடாயும், நரகத்துக்கான செயல்களாயும் ஆகிவிடும்.
மேற்கண்ட நபீ மொழியை மேற்சொன்னவாறு விளங்கிக் கொண்டவர்களே “பித்அத்”அனைத்தும் வழிகேடென்று கூறி “தல்கீன்”ஓதுவதையும், மற்றும் நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவற்றையும் தடுத்து வருகின்றார்கள். வழிகேடு என்றும் சொல்கிறார்கள்
இவர்கள் சொல்வது போல் “பித்அத்” எல்லாம் வழிகேடென்று வைத்துக் கொண்டால் உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் வழிகேட்டிலுள்ளார்கள் என்றே சொல்லவேண்டும். அதோடு ஒரு மனிதன் பல் துலக்குதல் முதல் பயணம் செய்கின்ற வரையிலான எல்லாக் காரியமும் “பித்அத்” ஆகிவிடும்.
இன்று வாழ்பவர்களில் அநேகர் பிறஷ், பற்பசை போன்றவற்றைக் கொண்டே பல்சுத்தம் செய்கிறார்கள். இதேபோல் இன்றுள்ளவர்களில் அநேகர் மிதிவண்டி, மோட்டார்சைக்கில், கார், வேன், விமானம் போன்றவற்றிலேயே பயணம் செய்கின்றார்கள்.
பல்சுத்தம் செய்வதற்காக பிறஷ், பற்பசை, போன்றவற்றைப் பாவிப்பதும், மேற்கண்டவற்றில் பயணம் செய்வதும் நபி ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவையாகும். “பித்அத்”எல்லாம் வழிகேடென்ற கருத்தின் படி மேற்கண்டவற்றைக் கொண்டு பல்சுத்தம் செய்பவர்களும், மேற்கண்டவற்றில் பயணம் செய்பவர்களும் வழிகேடர்கள் என்றாகிவிடும். “பித்அத்”எல்லாம் வழிகேடென்று சொல்பவர்களின் இக்கருத்து உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் வழிடேர்களாயும், நரகவாதிகளாயும்ஆக்கும் கருத்தாகும்.
மார்க்க விடயமின்றி உலக நடைமுறை விடயங்களுக்கு இந்த நபீ மொழி பொருத்தமற்றதென்று கூறி பிறஷ், பற்பசை கொண்டு பல்சுத்தம் செய்வதும், விமானம், பஸ், கார் போன்றவற்றில் பயணம் செய்வதும் “பித்அத்”என்ற வகையில் அடங்காது என்று சொல்பவர்களும் உள்ளனர். இதன் முழுவிபரமும் “ஷரீஅத்தின் பார்வையில் பித்அத்”என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
எனவே புதிதாக ஏற்படுத்தப்பட்டவை எல்லாம் “பித்அத்”. “பித்அத்”எல்லாம் வழிகேடு, வழிகேடெல்லாம் நரகம் செல்லும். என்ற நபீ ஸல் அவர்களின் அருள்மொழிக்கு இவர்கள் சொல்லும் விளக்கத்தை விட்டு வேறு விளக்கம் கொள்ளுதல் வேண்டும்.
مامن عام الاَوقد خصَ منه البعض
எந்த ஒரு பேச்சாயினும் அதிலிருந்து சில விடயங்களுக்கு விதி விலக்கு உண்டு என்ற பொது விதியைக் கருத்திற் கொண்டு ஆராய்ந்தால் பித்அத் எல்லாம் வழிகேடென்று கருத்து வராது. இது عام مخصوص என்று சொல்லப்படும்.அதாவது மேற்கண்ட நபீ மொழியில் வந்துள்ள “குல்லுபித்அதின்”என்ற வசனம் எல்லா எல்லா பித்அத்துக்களையும் எடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு பொதுப் பேச்சாயிருந்தாலும் கூட இந்தப் பேச்சிலிருந்து சில “பித்அத்”துகள் விதிவிலக்குப் பெறும்.
இதற்குச் செய்ய வேண்டியது என்னவெனில் “குல்லுபித்அதின்” என்ற வசனத்தில் வந்துள்ள “பித்அதின்” என்ற சொல்லுக்கு “ஸெய்யிஅதின்” என்ற சொல்லை வலிந்துரையாகக் கொண்டு “தீயபித்அத்” அனைத்தும் வழிகேடென்று பொருள் கொள்ள வேண்டும்.
كلَ بدعة سيَئة ضلالة தீய “பித்அத்”அனைத்தும் வழிகேடு என்று வலிந்துரை கொண்டால் திருக்குர்ஆனுக்கும், நபீஸல் அவர்களின் அருள் மொழிக்கும் முரணான நூதன அனுஷ்டானம் மட்டுமே வழிகேடு என்று விளங்க வரும்.
வலிந்துரை அவசியமா?
மேற்கண்ட நபீமொழிக்கு மேலே சொன்னது போல் வலிந்துரை கொள்வது மிக அவசியமானதாகும். வலிந்துரை கொள்ளாமல் “பித்அத்”எல்லாம் வழிகேடென்று கொண்டால் உலக முஸ்லிம்களில் அதிகமானவர்களை வழி கேடர்கள் என்றும், நரகவாதிகள் என்றும் சொல்ல வேண்டும். அதோடு “ஸஹாபஹ்” நபீ தோழர்களில் பலரையும் வழி கேடர்கள் என்றும், நரகவாதிகள் என்றும் சொல்ல வேண்டும். அது மட்டுமன்றி “பித்அத்” எல்லாம் வழிகேடென்று கொள்வது பல நபீ மொழிகளுக்கு முரணானதாயும் ஆகிவிடும்.
உலக முஸ்லிம்களில் அதிகமானவர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று கருதுவதும், நபீ தோழர்களை வழிகேடர்கள், நரகவாதிகள் என்று கருதுவதும், ஒரு நபீ மொழிக்கு முரண்படும் வகையில் இன்னொரு நபீ மொழிக்கு கருத்துக் கொள்வதும் பிழையான விடயமாகும்.
أصحابي كالنَجوم بأيهم اقتديتم اهتديتم
எனது தோழர்கள் நட்சத்திரங்கள் போன்றவர்கள். அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி பெற்று விடுவீர்கள் என்ற நபீமொழியையும்
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي
எனது வழிமுறையையும், எனக்குப்பின் வருகின்ற நல்வழி பெற்ற “கலீபஹ்களின் வழிமுறையையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். என்ற நபீமொழியையும் கருத்திற்கொண்டு ஆராய்ந்தால் மேலே நான் சுட்டிக்காட்டிய முரண்பாடு தெளிவாகும்.
ஏனெனில் நபீ (ஸல்) அவர்களின் காலத்தில் “தராவீஹ்”தொழுகை “ஜமாஅத்”கூட்டாக நடத்தப்படவில்லை. “ஸஹாபஹ்”நபீ தோழர்கள் தனித்தனியாகவே தொழுது வந்தார்கள். “கலீபஹ்”உமர் (றழி) அவர்களின் காலத்தில்றமழான் மாத ஓர் இரவு அவர்கள் மதீனஹ் பள்ளிவாயலில் நுழைந்தார்கள்.
அங்கு வழமை போல் நபீ தோழர்கள் தனித்தனியாக “தராவீஹ்”தொழுது கொண்டிருந்ததைக் கண்ட உமர் (றழி) அவர்கள், இவர்கள் அனைவரையும் ஒரே இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் சிறப்பாயிருக்கும் எனக் கூறிவிட்டு உபையிப்னு கஃப் என்ற நபீ தோழரின் தலைமையில் தறாவீஹ் தொழுகையை கூட்டாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார்கள். மறுநாளிரவு அவர்கள் பள்ளிவாயலில் நுழைந்த போது அனைவரும் குறித்த இமாமின் தலைமையில் தறாவீஹ் தொழுது கொண்டிருந்தது கண்டு نعمت البدعة هذه இது நல்ல “பித்அத்”என்று புகழ்ந்துரைத்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
உமர் றழி அவர்கள் ஒரு “பித்அத்”செய்தது மட்டுமன்றி அதை நல்ல “பித்அத்”என்று புகழ்ந்துரைத்திருப்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும். “பித்அத்”என்பதில் நல்லதும் உண்டு என்பதற்கு இது மறுக்க முடியாத ஓர் ஆதாரமே.
“பித்அத்” எல்லாம் வழிகேடென்று கூறுபவர்கள் உமர் )றழி( அவர்கள் செய்த இவ் வேலையை வழிகேடென்றும், உமர் )றழி( அவர்களை வழிகேடர் என்றும் சொல்ல வேண்டும். அதோடு நபீ தோழர்கள் பற்றியும், நல்வழி பெற்றவர்கள் என்று நபீ )ஸல்( அவர்களால் வருணிக்கப்பட்ட நான்கு கலீபஹ்கள் பற்றியும் வந்துள்ள நபீ மொழியையும் மறுக்க வேண்டும்.
ஆகையால் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்ற நபீ மொழிக்கு திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணான “பித்அத்”மாத்திரம் வழிகேடு என்று வலிந்துரை கொள்வது அவசியமாயிற்று.
كلَ محثة بدعة وكلَ بدعة ضلالةபுதிதாக ஏற்படுத்தப்பட்டவை யாவும் “பித்அத்” அவை அனைத்தும் வழிகேடு என்ற நபீ மொழியானது كلَ عين زانية எல்லாக் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்ற நபீ மொழி போன்றதாகும்.
வஹ்ஹாபிகள் சொல்வது போல் வலிந்துரை கொள்ளாமல் இந்த நபீமொழியை ஆய்வு செய்தால் நபீமார், வலீமார், நல்லடியார்களின் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்று கொள்ளவே வேண்டும். ஏனெனில் كلَ عين எல்லாக் கண்களும் என்ற இப் பொதுச் சொல் நபீமார்களின் கண்களையும், வலீமார்,
நல்லடியார்களின் கண்களையும் எடுத்துக் கொள்ளும். இது இஸ்லாமிய அடிப்படைக்கு முரணானதாகும். ஏனெனில் நபீமார், வலீமார், நல்லடியார்களின் கண்கள் பாவம் செய்யாதவையாகும். ஆகையால் இன்னோரின் கண்கள் தவிர ஏனையோரின் கண்களே விபச்சாரம் செய்கின்றன என்று கொள்வதாயின் இதற்கு வலிந்துரை கொள்ளுதல் அவசியமாகும். அதாவது
كلَ عين تنظر المرأة الأجنبيَة அந்நியப் பெண்ணைப் பார்க்கின்ற கண்கள் யாவும் என்று வலிந்துரை கொள்ள வேண்டும்.
இந்த நபீ மொழியும் மேலே சொன்ன நபீ மொழி போல் عام مخصوص என்ற பிரிவைச் சேர்ந்ததே. எல்லாக் கண்களும் என்று சொல் சொல்லப்பட்டிருந்தாலும் இப் பொதுச் சொல்லில் இருந்து சில கண்களுக்கு விதிவிலக்கு உண்டு.
இவ்வடிப்படையில் மேற்கண்ட நபீ மொழிகளை ஆய்வு செய்யாதவர்களே புதிதாக ஏற்படுத்தப்பட்டவை எல்லாம் “பித்அத்” என்றும் “பித்அத்”எல்லாம் வழிகேடு என்றும் சொல்கின்றார்கள். இவர்களின் வாதப்படி நபீமார்,வலீமார், நல்லடியார்களின் கண்களும் விபச்சாரம் செய்கின்றன என்றும், பாவம் செய்கின்றன என்றும் கொள்ளவேண்டும். இது இஸ்லாமிய “அகீதஹ்” கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும் ஏனெனில் வலீமார், நல்லடியார்களை விட்டாலும், அவர்களால் பாவம் நிகழச் சாத்தியமிருந்தாலும் நபீமார்களால் எக்காரணம் கொண்டும் பாவம் நிகழவே மாட்டாது. அவர்கள் “நுபுவ்வத்” நபித்துவத்தின் முன்னும், அதன் பின்னும் “மஃஸூமீன்” பாவத்தை விட்டும் பாதுகாக்கப் பட்டவர்களேயாவர். இதுவே ஸுன்னத்வல்ஜமாஅத் கொள்கையுடையோரின் “அகீதஹ்” கொள்கையாகும்.
“பித்அத்”தொடர்பான விபரம் நான் எழுதி வெளியிட்ட மெளலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு எனும் நூல் 38ம் பக்கம் முதல் 47ம் பக்கம் வரை விரிவாக எழுதப்பட்டுள்ளது. அங்கே காண்க!
சுருக்கம்
நபீ ஸல் அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்டவை யாவும் “பித்அத்”என்ற பெயருக்குப் பொருத்தமானதாயிருந்தாலும் “பித்அத்”எல்லாம் வழிகேடென்று கொள்ளுதல் கூடாது. மாறாக திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிக்கும் முரணான கெட்ட “பித்அத்”மட்டுமே வழிகேடு என்று கொள்ள வேண்டும். இதன் படி “தல்கீன்” ஓதுதல் “பித்அத்”என்று வைத்துக் கொண்டாலும் அது நல்ல “பித்அத்”என்று கொள்ளவேண்டும்.
“தல்கீன்”ஓதக்கூடாதென்போர் தமது வாதத்தை நிறுவுவதற்குக் கூறிவரும் காரணங்களில் ஒன்று- “தல்கீன்” தொடர்பாக திருக்குர்ஆனிலோ, பலம் வாய்ந்த நபீ மொழியிலோ ஆதாரம் இல்லை என்பது. மற்றது- நபீ )ஸல்( அவர்களின் காலத்தின் பிறகு ஏற்படுத்தப்பட்ட ஒன்று “பித்அத்” ஆகும் என்பது. “பித்அத்” எல்லாம் வழிகேடு. வழிகேடெல்லாம் நரகத்தில். என்ற பலம் வாய்ந்த நபீ மொழியின் படி “தல்கீன்” ஓதுவதும் “பித்அத்” ஆன வழிகேடு என்பதாகும்.
அவர்கள் கூறும் இவ்விரு காரணங்களில் முந்தின காரணம் நான் மேலே சொல்லி வந்த விளக்கத்தின் மூலம் பிழை என்பது தெளிவாகி விட்டது. “தல்கீன்”ஓதுவதற்குப் பலமான நபீ மொழியில் ஆதாரம் இல்லாவிட்டாலும் பலம் குறைந்த நபீ மொழியில் ஆதாரமிருப்பதாலும், பலம் குறைந்த நபீ மொழி கொண்டு செயல்பட முடியுமென்று பொது விதி இருப்பதாலும் “தல்கீன்”கூடாதென்போரின் முந்தின காரணம் பிழையாகிவிட்டது.
அவர்கள் கூறும் இரண்டாவது காரணம் “பித்அத்” எல்லாம் வழிகேடு என்ற வகையில் “தல்கீன்”ஓதுவதும் வழிகேடான “பித்அத்” என்பதாகும்.
“பித்அத்” தொடர்பாக மேலே தரப்பட்டுள்ள விளக்கத்தின் படி “தல்கீன்”ஓதுவது ஒரு வகையில் “பித்அத்”என்று வைத்துக் கொண்டாலும் அது “பித்அதுன்ஹஸனதுன்” என்ற நல்ல “பித்அத்”ஆகுமேயன்றி “பித்அதுன்ஸெய்யிஅதுன்” என்ற கெட்ட “பித்அத்” ஆகாதென்பதும் தெளிவாகிவிட்டது.
“தல்கீன்”ஓதுவது ஆகுமென்று கூறும் “ஸுன்னத்வல் ஜமாஅத்” அறிஞர்கள் தமது வாதத்தை நிறுவுவதற்குக் கூறும் ஆதாரங்களை இங்கு எழுதுகின்றேன்.