வஸீலாத்தேடலாமா? தொடர்-08





உலகில் யாரால் அல்லது எந்த வஸ்துவால் என்ன செயல் வெளியானாலும் அச்செயலுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டும்தான். 
கத்தி வெட்டியது. நெருப்பு சுட்டது என்பதெல்லாம் மஜாஸ் அக்லீ என்ற வகையைச் சேர்ந்ததேயாகும்.ஏனெனில் சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியதேயல்லாமல் நெருப்புக்கும், கத்திக்கும் உரியதல்ல. நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை. கத்தி சுயமாக வெட்டுமதுமில்லை.

நெருப்புச் சுயமாகச் சுடும் என்று சொல்வதும் கத்தி சுயமாக வெட்டும் என்று சொல்வதும் அறியாமையாகும். நெருப்பு சுயமாக சுடுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.

கத்தி சுயமாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்த நேரத்தில் அந்தக் கத்தி அவர்களை வெட்டியிருக்க வேண்டும். எனவே, நெருப்பு சுயமாகச் சுடுவதுமில்லை என்பதும் கத்தி சுயமாக வெட்டுவதுமில்லை என்பதும் விளங்கி விட்டது.

மேலே நான் எழுதிக் காட்டிய உதாரணங்களில் “ஷபல்லாஹுல் மறழ” (அல்லாஹ் நோயைச் சுகப்படுத்தினான்.) என்பதும் “அன்பதல்லாஹுல் பக்ல” (கீரையை அல்லாஹ் முளைக்கச் செய்தான்.)

என்பதும் “ஹகீகத் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவன் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும். இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரு செயல்களும் அச்செயலுக்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

இதே போல் “ஷபத்தவாஉல் மறழ” (மருந்து நோயைச் சுகமாக்கி விட்டது) என்பதும் “அன்பதல் மதருல் பக்ல” (மழை கீரையை முளைக்கச் செய்து விட்டது.) என்பதும் “மஜாஸ் அக்லீ” என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

அதாவது ஒரு செயலை அச்செயலுக்குரியவனின் பக்கம் சேர்த்துச் சொல்லாமல் அது வெளியாவதற்கு வழியாக – பாத்திரமாக இருந்த ஒருவன் பக்கம் அல்லது ஒன்றின் பக்கம் சேர்த்துச் சொல்வதாகும்.

இவ்விரு உதாரணங்களிலும் சுகமாக்குதல், முளைக்கச் செய்தல் என்ற இரண்டு செயல்களும் அதற்குரியவனான அல்லாஹ்வின் பக்கம் சேர்க்கப்படாமல் அவ்விரு செயல்களும் வெளியாவதற்கு வழியாக - காரணமாக இருந்த மருந்தின் பக்கமும், மழையின் பக்கமும் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

சுகப்படுத்துபவனும், முளைக்கச் செய்பவனும் அல்லாஹ்வாக இருந்தாலும் “மஜாஸ் அக்லீ“ என்ற முறைப்படி அவ்விரண்டு செயல்களும் வெளியாவதற்கு வழியாக இருப்பவர்கள் பக்கம் சேர்த்து மருந்து சுகப்படுத்தி விட்டதென்றும், மழை கீரயை முளைக்கச் செய்து விட்டதென்றும் தாராளமாகச் சொல்லலாம். இவ்வாறு சொல்லுதல் எந்த வகையிலும் மார்க்கத்திற்கு முரணானதல்ல.

எனவே எந்தச் செயல் யாரால் அல்லது எந்த வஸ்துவால் வெளியானாலும் அச்செயல் அல்லாஹ்வின் செயலென்ற இஸ்லாமிய அடிப்படைத் தத்துவத்தின் படி நம்பினவன் மட்டும்தான் விசுவாசியாவான்.

இதற்கு மாறாக எந்தவொரு செயலேனும் சிருஷ்டிக்குரியதென்று நம்பினால் அதாவது சிருஷ்டிக்கு சுயமான செயலுண்டு என்று நம்பினால் அவ்வாறு நம்புகிறவன் “முஷ்ரிக்“ இணைவைத்தவனாகி விடுவான். ஏனெனில் சிருஷ்டிக்கு சுயமான செயலுண்டு என்று நம்புதலே ஷிர்க்கை ஏற்படுத்தி விடும்.

முற்றிற்று