அண்ணல் பெருமானார் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் இப்னு பாகிர் என்பார் வாழ்ந்திருந்தார். பெருமானாரின் திருத்தோழராகும் பேறு பெற்ற அன்னார் , அண்ணலாரின் அரிய வாழ்த்தினைப் பெற்றவர்.

அவரின் வழித்தோன்றல்கள் அனைவரும் காலமெல்லாம் கமழ்மணத்துடன் வாழவேண்டும் என்றே அண்ணலார் ஆசி கூறினார். அந்த பரம்பரையில் வந்தவரே 'சேகு முதலியார்' என்ற செய்கு முஹம்மது அலியார் ஆவர்.
அன்னார் மலையாள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்க்கு வந்து, திருநெல்வேலியைச் சார்ந்த நாகலாபுரத்தில் குடியிருந்துகொண்டு, அதையடுத்திருந்த எட்டையபுரத்து மகாராஜாவிடம் வாசனைத் திரவியங்களை எடுத்துப் போய் விற்றுக் காலம் கழித்து வந்தார்.
உயர்ந்த மணப்பொருட்களை வழங்கித் தம் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சேகு முதலியார் தம் அருகிலேயே வாழ்ந்து வரவேண்டு மென்று மன்னர் விரும்பினார்.
என்வே, சேகு முதலியாரும் மன்னரின் விருப்பிற்க்குக் கட்டுப்பட்டு,நாகலாபுரத்திலும் எட்டையபுரத்திலுமாக வாழ்ந்து வந்தார்.அக்காலத்தில்தான், அவருடைய ஒப்பற்ற அருந்தவக் கொழுந்தாக 'உமறு' என்ற அழகிய குழந்தை பிறந்தது.
இளமையிலே எழிலும் கல்வியார்வமும் வாய்க்கப் பெற்ற சிறுவர் உமறு, எட்டையபுரத்து அரண்மனைத் தமிழ்ப்புலவராயிருந்த 'கடிகை முத்து புலவர்'என்பவரிடம் தமிழ்க் கல்வி பயிலத் தொடங்கினார். பல்வகைக் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உமறு, தம் ஆசானின் பெருமதிப்பிற்குரிய மாணவரானார்.
இவ்வாறிருக்கையில், ஒருநாள் வடநாட்டிலிருந்து ஆரியமும் அருந்தமிழும் கற்றுப் புலமை பெற்ற 'வாலை வாருதி' என்ற புலவர் எட்டையபுர அரசவைக்கு வந்து சேர்ந்தார். தம்மை வாதில் வெல்லத் தக்கார் யாருமிலார் என்று அவர் மார் தட்டிப் பேசிப் பிற புலவர்களை வாதுக்கழைத்தார். அதன்படியே எட்டையபுரத்து அரசவையிலும் வந்து அறிவித்தார். மன்னரும் ஆவன செய்ய இசைந்தார்.
புலமைத் திறத்தாலன்றி, மாய மந்திரங்களாலேயே பல அரசவைப் புலவர்களை வெற்றிகொண்ட வாலைவாருதியைப் பற்றிக் கடிகைமுத்துப் புலவர் கேள்வியுற்றிருந்தார். அதனால், வித்தைகள் புரியும் வித்துவானைத் தம்மால் எவ்வாறு வெற்றிகொள்ள முடியுமென்ற நீங்காக் கவலையில் ஆழ்ந்திருந்தார்.
ஆசானின் கவலையை அறிந்த மாணவர் உமறு, அவரை அணுகி, கவலைக்கான காரணத்தை விளங்கிக் கொண்டார். எனவே, வாலை வாருதியுடன் வாதிடுவதற்கான குறிப்பிட்ட நாள் வந்ததும், தம் ஆசிரியரிடம் அவருக்குப் பகரமாக அரசவை செல்லுவதற்கான அனுமதியை வலிந்துப் பெற்று, எட்டையபுரத்து அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
உடல் நலக் குறைவால் கடிகைமுத்துப் புலவர் வரவில்லையென்றும், அவருக்குப் பகரமாக அவரின் மாணவர் வந்திருக்கிறார் என்றும், வாலை வாருதி தம் சொற்பொழிவைத் தொடங்கலாம் என்றும் மன்னர் உத்தரவிட்டார்.
அதைச் செவியேற்ற வாலைவாருதி, தம் வலக்கையிற் போட்டிருந்த தங்கக் கடகத்தை அசைத்து மேலேற்றினார். வழக்கமாக அக்கடகத்திலிருந்து ஒலிக்கும் 'வாலைவாருதி என்றறியீரோ' என்ற சொற்கள், அன்றைக்கு மட்டும், 'வாலைவாருதி என்றறியாயோ பிள்ளாய்!' என்று உண்டாயின.
அப்போது உமறுப் புலவர், தம் இடுப்பில்செருகியிருந்த யாழ்ப்பாணத்து எழுத்தாணியை எடுத்து நிலத்தில் ஊன்றி, "என் எழுத்தாணியே! இவருக்கெதிர் பேசு!" என்று கட்டளையிட்டார். ஒன்றும் நிகழவில்லை! பின்னும் உத்தரவிட்டார்.
அப்போதும் ஏதும் நிகழவில்லை! மூன்றாவது முறையிலும் முயன்று தோல்வி கண்ட உமறு, கண்கள் சிவக்க, முகத்தில் தீக்கனல் பறக்கக் கடுஞ்சினம் கொண்டு, எழுத்தாணியைப் பார்த்து, 'பேசு!' என்று உரக்கக் கூறி உத்தரவிட்டார்.
அவை கிடுகிடுத்த அவ்வோசையைத் தொடர்ந்து, அவ்வெழுத்தாணியிலிருந்து கீழ்க்காணும் பாடல் உதிர்ந்து உள்ளங்களை அதிர வைத்தது:
"சமரதுர கததுங்க மனருஞ்ச பாசென்று
சரிசமா சனமீதிலே
அமரவொரு நரகொம்பு தினமுஞ்சு மாசெல்லு
மமுதகவி ராஜனானே
திமிரபகை வரைவென்ற பருதியெனு மெமதெட்டத்
தீரனணி வாயில்வித்வான்
உமறுகுமு றிடிலண்ட முகடும்ப டீரென்னு
முள்ளச்சம் வையும்பிள்ளாய்!"
இதனைச் செவியுற்ற புலவர் வாலைவாருதி, உளம் பதறி, மெய் நடுக்குற்று, தனது மந்திரச் சக்தியெல்லாம் இத்தகைய அற்புதத்தின் முன் அற்பம் என்றுணர்ந்து, எழுந்து சென்று உமறு புலவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரி, அரசவையை விட்டு அகன்றார்.
இந்நிகழ்ச்சி, மன்னருக்கு உமறுப் புலவர் மீது ஒப்பற்ற மதிப்பை ஏற்படுத்திற்று. மகிழ்ச்சிப் பெருக்கால், மன்னர் தம்மிடமிருந்த விருதுகள் பலவற்றையும் உமறுப் புலவருக்கு வழங்கி அனுப்பிவைத்தார்.
வெற்றி பெற்று வீடு திரும்பிய தம் மாணாக்கரை இறுகத் தழுவிக்கொண்ட கடிகைமுத்துப் புலவர், தாம் அப்போது முதுமை எய்திவிட்டதால், அன்றுமுதல் உமறே எட்டையபுரத்து அரண்மனை அவைப் புலவராக இருக்கவேண்டுமென்று ஆசி கூறி அனுப்பி வைத்தார். அன்று முதல் உமறுப் புலவர் எட்டையபுரத்து அரண்மனையை அலங்கரித்து வந்தார்.